வாஷிங்டன்,
இந்திய பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 20-ம் தேதி அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த பயணத்தின் போது இந்திய – அமெரிக்க பெரு நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு விருந்தும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், உலகிலேயே இந்தியா அமெரிக்கா நட்பு மிகவும் உறுதியானது வலுவானது, நெருக்கமானது என்றும், முன்பு எப்போதையும் விட இப்போது புதிதான மாற்றத்தை கொண்டுள்ளது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நம் இருநாடுகளின் நட்புறவு நிலையானது, உலகின் நன்மைக்கானது என்றும் இந்த பூமி உருண்டையை இன்னும் வாழத்தக்கதாக மாற்றும் என்றும் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.