புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ விவகாரத்தை சிபிஐ விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அதன் அடிப்படையில் அந்த வீடியோ தொடர்பான விசாரணையை மாநிலத்துக்கு வெளியே நடத்த உத்தரவிடக் கோரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்ன? மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்கும் முன்பாக பேசிய பிரதமர் மோடி, “மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் நாகரிக சமூகத்துக்கான அவமானம். இதற்காக நாடு வெட்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டங்களை இயற்றும்படி நான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்தச் சம்பவம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மணிப்பூர் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், குற்றவாளிகள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தப்பக் கூடாது. நான் நாட்டுக்கு உறுதியளிக்கிறேன். சட்டம் அதன் முழு பலத்துடன் தனது கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அவைக்கு வந்து விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் அடுத்த வாரம் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.