ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சட்டசபை தேர்தல் பிரசாரத்தையும் காட்டமான பேச்சு மூலம் தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் புயலை கிளப்பி வரும் ரெட் டைரி விவகாரத்தை கையில் எடுத்து கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையேயான மோதலுக்கு சுமூகமான முடிவை காண்பதில் டெல்லி மேலிடம் தீவிரமாக இருக்கிறது. ஆனால் இந்த உட்கட்சி மோதலே தங்களுக்கு சாதகம் என கணக்கு போடுகிறது பாஜக.
ராஜேந்திர சிங் குதா: இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அமைச்சரவையில் இருந்து ராஜேந்திரசிங் குதா திடீரென நீக்கப்பட்டது காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானவர் குதா. பின்னர் 2019-ல் காங்கிரஸில் இணைந்து அமைச்சரானார். சில நாட்களுக்கு முன்னர், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவில்லை என விமர்சித்திருந்தார் குதா. இதனால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
ரெட் டைரி: இதனைத் தொடர்ந்து காங்கிரஸை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார் ராஜேந்திர சிங் குதா. அமலாக்கத்துறை சோதனைகளின் போது, அசோக் கெலாட் உத்தரவின்பேரில் தாம் ரெட் டைரி ஒன்றை பதுக்கி வைத்திருக்கிறேன். அதில் காங்கிரஸின் அத்தனை ஊழல் விவரங்களும் அடங்கி இருக்கிறது என பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார் குதா.
பிரதமர் மோடி: இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார் . பின்னர் பாஜக பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். அப்போது ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை மிக கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, ரெட் டைரி விவகாரத்தையும் சுட்டிக்காட்டி வெளுத்தெடுத்தார். ராஜஸ்தானில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் பிரதமர் மோடி முழக்கமிட்டார்.
கெலாட் மறுப்பு: பிரதமர் மோடியின் இந்த விமர்சனம், தோல்வி பயத்தால் முன்வைக்கப்படுகிறது. எங்களுக்கு தெரிந்தவரை அப்படி எந்த ஒரு ரெட் டைரியும் இல்லை. பிரதமர் மோடி விரக்தியில் பேசுகிறார் என அசோக் கெலாட் பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லை?: முன்னதாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு தாம் அழைக்கப்படவில்லை என கெலாட் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட மறுப்பு பதிவில், நெறிமுறையின்படி, நீங்கள் முறையாக அழைக்கப்பட்டுள்ளீர்கள், நீங்கள் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களால் கலந்து கொள்ள இயலாது எ ன்று உங்கள் அலுவலகம் தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய வருகைகளின் போதும் நீங்கள் எப்போதும் அழைக்கப்பட்டுள்ளீர்கள், அந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள். இன்றைய நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். வளர்ச்சிப் பணிகளின் பெயர் பலகையிலும் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஏதேனும் உடல் அசௌகரியம் இல்லாவிட்டால், உங்கள் பங்கேற்பு அதிக முக்கியத்துவம் பெறும் என தெரிவித்திருந்தது.