புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் தொடங்கி இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பி வருகின்றனர். தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால தொடர் முடங்கி வருகிறது.
இந்த சூழலில் மக்களவை நேற்று காலை கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ‘பிரதமரே அவைக்கு வாருங்கள். மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலையுங்கள்’ என்று எதிர்க்கட்சி எம்பி.க்கள் கோஷமிட்டனர்.
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும்போது, “அவையில் நடப்பதை ஒட்டுமொத்த நாடும் பார்த்து கொண்டிருக்கிறது. தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று கடிந்து கொண்டார்.
ஆனால் அமளி தொடர்ந்து நீடித்ததால் அவை தொடங்கிய 6 நிமிடங்களில் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் மக்களவை கூடியபோது அமளியால் மாலை 3 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
2 மசோதாக்கள் நிறைவேற்றம்: மாலை 3 மணிக்கு மக்களவை கூடியபோது, “எங்களுக்கு நீதிகிடைக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
கடுமையான அமளிக்கு நடுவே மக்களவையில் நேற்று ‘ஜன் விஸ்வாஸ்’ (விதிமுறைகள் திருத்தம்) மசோதா நிறைவேற்றப்பட்டது. 76 பழைய சட்டங்களை நீக்க வகை செய்யும் மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடற்கரை கனிம ஒழுங்குமுறை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் அமளி: மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், ஒளிப்பதிவு திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது மணிப்பூர் விவகாரத்தை முன்னிறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
கருப்பு உடை போராட்டம்: இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று கருப்பு உடை அணிந்து மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்றனர்.