நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், அனிருத், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, VTV கணேஷ், சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தில் விக்னேஷ் சிவன் ‘ரத்தமாரே’ எனும் பாடலையும், அருண்ராஜா ‘காவாலா’ பாடலையும், சூப்பர் சுப்பு, ‘ஹுக்கும்’, ‘ஜுஜுபி’, பாடலையும் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் விழா மேடையில் பேசிய விக்னேஷ் சிவன், “எவ்ளோ சம்பாதிச்சாலும், ஒரு சில மொமன்ட்காகத் தான் காத்திருப்போம். கடந்த ஆண்டு இதே தேதி எங்க அப்பா இறந்த நாள். அப்போ செஸ் ஒலிம்பியாட் டைம், அப்பவும் தலைவர் வந்தாரு, அவரைப் பார்த்தேன். இப்போ அவர் முன்னாடி நிக்கிறேன். எங்க அப்பா என் கூட இருக்க மாதிரியிருக்கு. உங்களுக்கு மியூசிக் போடும் போது மட்டும் அனிருத் வேற லெவல்ல இறங்கிடுறாரு!” என்று சிரித்தார்.
இதையடுத்துப் பேசிய அருண்ராஜா, “‘கபாலி’, ‘காலா’ அப்போலாம் உங்களைப் பாக்கணும், உங்களுக்கு என் பாட்டு புடிச்சிருக்கானு கேக்கணும் அப்டினு நெனச்சேன். இப்போ உங்க முன்னாடி நிக்குறேன். ரொம்ப சந்தோசமா இருக்கு. வந்த உடனே நேரா மேடைல ஏத்திடாங்க, திடீர்னு எங்கையோ உச்சில நிப்பாட்டின மாதிரி இருக்கு. அதற்கு ஒரே சக்தி தான் காரணம். அது ரஜினி சார்” என்று கூறினார்.
‘ஹுக்கும்’ பாடலைக் கேட்டுவிட்டு ரஜினி காந்த் பாராட்டியது குறித்துப் பேசிய பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, “தலைவர் வாய்ஸ் நோட்ல ‘வணக்கம் சுப்பு நான் ரஜினிகாந்த் பேசுறேன்’ என்று சொன்னார். அவ்ளோதான் முடிஞ்சு போச்சு! ரசிகர்கள் எல்லாரும் கொண்டாடிவாங்க’ அப்டீனு சொன்னார். அவர் சொன்னது எல்லாமே பளிச்சிடும். அதான் அவர் அளவா பேசுறாரு” என்று பேசினார்.