ரூ.561 கோடியில் சென்னை வெள்ள தடுப்பு திட்டம்: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: சென்னை வெள்ள தடுப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். மொத்தம் ரூ.561 கோடி மதிப்பிலான இந்ததிட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.500 கோடி வழங்கப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அளவுக்கு அதிகமானமழையால் திடீர் வெள்ள பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் தடுப்புநிதியின் மூலம் ரூ.561.29 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த சென்னைவெள்ள தடுப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும். புதிய திட்டத்தால் சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும்.

நகர்ப்புற வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்தில் இது முதலாவது முயற்சி ஆகும். எதிர்காலத்தில் நகரங்களின் வெள்ள தடுப்பு திட்டங்களை மேம்படுத்த இது முன்னுதாரணமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்தில் 77 ஏக்கர்பரப்பளவு கொண்ட சாத்தாங்காடு ஏரி, 11 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணலி ஏரி, 140 ஏக்கர் பரப்பளவு கொண்ட சடையன்குப்பம் ஏரி, 139 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாதவரம் பெரியதோப்பு ஏரி உள்ளிட்ட 8 ஏரிகள் (484 ஏக்கர்) ரூ.73 கோடியில் புனரமைக்கப்படும்.

பருவமழைக் காலங்களில் மாதவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் திருப்பிவிடப்படும். கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க மாதவரம் ஏரியின் உபரிநீர் கால்வாய் மேம்படுத்தப்படும். கொளத்தூர் ஏரியின் உபரிநீர் கால்வாயின் கொள்ளளவு அதிகரிக்கப்படும்.

கதிர்வேடு தாங்கல் ஏரி, புத்தகரம் ஏரியின் கொள்ளளவு அதிகரிக்கப்படும். இதன்மூலம் கொரட்டூரில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும். போரூர் ஏரியின் உபரி நீர் கெருகம்பாக்கம் கால்வாயில் திருப்பி விடப்படும். இதன்மூலம் மணப்பாக்கம், நந்தம்பாக்கத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும்.

தண்டையார்பேட்டை, ராயபுரம்,திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் பகுதிகளில் கூடுதல்கால்வாய்கள் கட்டப்படும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.