சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து பல பகுதிகள் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகளும் நிவாரணம் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “இதற்கு முன் வந்ததெல்லாம் சிற்றிடர். ஆனால் தற்போது வந்திருப்பது பேரிடர். அரசைக் குறைகூறுவது சரிதான். ஆனால் அதைவிட மக்களுக்கு உதவுவதை முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும் வல்லூநர்களுடன் ஆலோசித்து, இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க நீண்ட கால திட்டங்கள், தீர்வுகள், தற்போதைய சூழலைக் கையாளும் விதம் குறித்து ஆராய வேண்டும். சூழலியல் மாற்றம் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. வடநாடுகளிலும் இது போன்ற இயற்கை பேரிடர்கள் நடக்கின்றன. 20 செ.மீ மழை வந்தாலும் அதைத் தாக்குப்பிடிக்கும் சக்தி இருக்கிறது என அரசு பெருமையாகக் கூறியது.
ஆனால், 56 செ.மீ மழை பொழிந்திருக்கிறது. எனவே, அரசைக் குறைகூறும் படலத்தை பிறகு வைத்துக்கொண்டு, தற்போது மக்களுக்கு என்ன உதவிகள் வேண்டும் என்பதைக் கேட்டுச் செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். அரசு இயந்திரம் ஒரு கோடி மக்களுக்கும் உடனே சென்றடையச் சாத்தியமில்லை என்பதால், நாமும் நம்மால் ஆன உதவிகளைச் செய்ய கரம் கோர்க்க வேண்டும்.

அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, பொன்னேரி, ஆர்.கே நகர், வில்லிவாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய பகுதி 5000 பேருக்கு உதவிகளை வழங்கவிருக்கிறோம். இது போக வேளச்சேரியில் சுமார் 5000 பேர் சாப்பிடும் அளவில் ஒரு கிச்சன் ஏற்பாடு செய்திருக்கிறோம். மேலும், தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்களையும் அமைக்கவிருக்கிறோம்.
மின்சாரமின்றி, மழைநீர் வெளியேறாத சூழலைத் தவிர்க்க முடியவில்லைதான். மேலும், இந்த நிலை, இந்த வருடத்துடன் நின்றுவிடும் என எந்த அரசியல்வாதியாலும் வாக்குறுதி தரமுடியாது. வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில், நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும். அரசு போதிய ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும், இந்தளவு மழை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை வந்திருப்பதால், பாதுகாப்பு குறைவாக இருக்கிறது என நாம் எண்ணிக்கொள்கிறோம்.

எனவே, எந்த அரசாக இருந்தாலும் கோபப்படாமல், சார்பு இல்லாமல் நாங்கள் தொடர்ந்து இயங்கி வருகிறோம். அரசியலுக்காக நாங்கள் இயங்கவில்லை என்பதையும் அறிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர், “அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும்.
இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்துச் செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்ய உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.