பெங்களூரு, : வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை வழங்கும், யுவநிதி திட்டத்திற்கான முன்பதிவு வரும் 21 ம் தேதி முதல் துவங்குவதாக, அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் அறிவித்து உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது, காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் ‘கிரஹ லட்சுமி’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை; ‘சக்தி’ திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்; ‘அன்னபாக்யா’ திட்டத்தின் கீழ் மாதம் பத்து கிலோ இலவச அரிசி.
‘கிரஹ ஜோதி’ திட்டத்தின் கீழ் 200 யூனிட்டிற்கு கீழ், மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் இல்லை; ‘யுவநிதி’ திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 உதவித்தொகை என, ஐந்து வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன.
இதில் யுவநிதி திட்டத்தை தவிர, மற்ற நான்கு வாக்குறுதிகளும் அமலுக்கு வந்தன. ஆனால், கிரஹலட்சுமி திட்டம் ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. ஆனால் ஒரேயொரு மாதம் மட்டுமே பெண்களுக்கு 2,000 ரூபாய் வந்ததாம். இது பற்றி ஏராளமானோர், புகார்கள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஐந்தாவது வாக்குறுதியான ‘யுவ நிதி’ திட்டம் 2024 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று, முதல்வர் சித்தராமையா கடந்த மாதம் கூறி இருந்தார்.
இரண்டு ஆண்டுகள்
இந்நிலையில் கர்நாடகா மருத்துவ கல்வி அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல் நேற்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
கர்நாடகா அரசின் மற்றொரு லட்சிய திட்டமான, பட்டதாரி இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கும், யுவ நிதி திட்டத்திற்கான முன்பதிவு வரும் 21 ம் தேதி துவங்குகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல், அதிகாரபூர்வமாக அமலுக்கு வரும். இளைஞர்களுக்கு முதுகெலும்பாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் ஐந்து லட்சம் இளைஞர்களின், வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக பணம் சென்றடையும்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
யுவ நிதி திட்டத்தின் மூலம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாயும், டிப்ளமோ படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் 1,500 ரூபாயும், உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
பட்டப்படிப்பு
அதற்குள் வேலை கிடைத்தால், உதவி தொகை வழங்குவது நிறுத்தப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், கர்நாடகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர் 2022 – 2023 ம் கல்வி ஆண்டில், பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற பின்னர் குறைந்தது 180 நாட்களுக்கு, வேலையில்லாமல் இருக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்