புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச கூட்டாண்மை உச்சி மாநாட்டை (ஜிபிஏஐ) பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயற்கை நுண்ணறிவை இந்தியாபயன்படுத்தும் என்று பிரதமர் மோடிஉறுதியளித்தார்.
இதுகுறித்து அவர் உச்சி மாநாட்டில் மேலும் பேசியதாவது:செயற்கை நுண்ணறிவு (ஏஐ)குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில்அடுத்
த ஆண்டு நடைபெறவுள்ள ஜிபிஏஐ உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது என்பது மகிழ்ச்சியான விசயமாகும்.செயற்கை நுண்ணறிவைப் பொருத்தவரையில் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. எனவே, அவற்றை பயன்படுத்தும் ஒவ்வொரு தேசமும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் சமூக மாற்றங்களை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு விவசாயத்தின் பல்வேறு அம்சங்களில் உதவிடும் வகையில் சமீபத்தில் அதற்கான சாட்போட் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், சுகாதாரம்,நிலையான வளர்ச்சி இலக்குகளைஅடைவதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேநேரம், நெறிமுறைகளுக்கு உட்பட்டே அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அப்போதுதான், ஏஐ மீதான நம்பிக்கை வலுப்பெறும்.
ஏஐ தொழில்நுட்பம் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வது நமது கைகளில்தான் உள்ளது. எனவே, அதன் பயன்பாட்டிற்கான உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம்.
வாட்டர்மார்க்.. எந்தவொரு தகவலையும் அல்லது தயாரிப்பையும் ஏஐ உருவாக்கியது என்பதை குறிக்கும் வகையில் வாட்டர்மார்க் போன்ற மென்பொருள் குறியீடுகளை அறிமுகப்படுத்த முடியுமா என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அல்லது ஏஐ திறன்களுக்கு ஏற்ப சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை என வகைப்படுத்தக்கூடிய தணிக்கை பொறிமுறையை உருவாக்க முடியுமா என்பது குறித்தும் நாம் ஆராய வேண்டும். ஏனெனில், புதிய எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஏஐ தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.