டிசம்பர் 28 இரவன்று, கர்நாடகாவிலுள்ள வர்தூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் நீச்சல் குளத்தில், 9 வயது சிறுமி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இறந்த சிறுமி அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ராஜேஷ் என்பவரின் மகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
விசாரித்ததில், அந்தச் சிறுமி விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாள் என்று கூறப்படுகிறது. அவளை மருத்துவமனைக்கும் விரைந்து அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமி இறந்துவிட்டதாகக் கூறிவிட்டார்கள்.

அந்தச் சிறுமியின் தந்தையோ, தன் மகள் நீச்சல் குளத்தில் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டாள் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், “சிலரின் கவனக்குறைவால், இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாகக் குழந்தைகள் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அனைத்தையும் சரியாகப் பராமரிக்க வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கொடுத்துப் பல மணி நேரமாகியும், யார்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குற்றம்சாட்டுகிறார்.

இது குறித்து டி.சி.பி சிவகுமார் கனரே பேசுகையில், “இந்த மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். அதன் முடிவுக்காகவும், தடயவியல் அறிக்கைக்காகவும் காத்திருக்கிறோம். மேலும், அந்த நீச்சல் குளத்தைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. பொதுவாகவே, மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தால், அதற்கான காயங்கள் உடலில் காணப்படும். ஆனால், உயிரிழந்த சிறுமியின் உடலில் அத்தகைய காயங்கள் ஏதும் இல்லை. இருப்பினும், அறிக்கைகளின் முடிவுகளை வைத்தே நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்” என்றார்.