மூணாறு:கேரளாவிலுள்ள முக்கிய சுற்றுலாப்பகுதிகளை ஒரே நாளில் சுற்றி பார்க்கும் வகையில் ‘ஹெலி டூரிஸம்’ திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஸ் இன்று (டிச., 30) துவக்கி வைக்கிறார்.
கேரளாவில் தனியார் பங்களிப்புடன் ‘ஹெலி டூரிஸம்’ திட்டம் சுற்றுலாத்துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. முதற் கட்டமாக மாநிலத்திலுள்ள முக்கிய 11 சுற்றுலாப்பகுதிகளை இணைக்கும் வகையில் இச்சேவை துவங்கப்படுகிறது. அதற்கு ஆறு முதல் 12 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
திருவனந்தபுரம், கொல்லம், ஜடாயுபாறை, பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, மூணாறு, குமரகம், கோழிகோடு, காசர்கோடு ஆகிய சுற்றுலா பகுதிகளில் உள்ள ஹெலிபேடுகளை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா ஹெலிகாப்டர் சேவையை சுற்றுலாத்துறை அமைச்சர் முகமதுரியாஸ் இன்று துவக்கி வைக்கிறார்.
சமீப காலமாக கேரளாவுக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த கப்பல்கள் ஒரு நாள் தங்கிச் செல்கின்றன. அந்த பயணிகளுக்கு ஹெலி டூரிஸம் திட்டம் பயனுள்ளதாக அமையும். சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கேரள மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement