திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் தாமிரபரணி ஆற்று வெள்ளமும் மழை வெள்ளமும் பல்வேறு இடங்களில் புகுந்து சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தேங்கியுள்ள மணலை சிலர் திருடி செல்வது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றிலிருந்து அளவுக்கு அதிகமாக மணல் அள்ளி எடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். திருநெல்வேலி மாநகரில் ஆற்றங்கரையோரம் முழுக்க பல கி.மீ. தூரத்துக்கு பரவிகிடந்த வெண்மணல் பரப்பை தற்போது காணமுடியவில்லை. இப்போது ஆங்காங்கே அபாய குழிகள்தான் ஆற்றின் நடுவே உருவாகியிருக்கின்றன என்று வண்ணார்பேட்டையிலுள்ள முதியவர்கள் பலரும் கவலை தெரிவிக்கிறார்கள்.
இச்சூழ்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மணல் ஆற்றங்கரையில் ஆங்காங்கே தேங்கியிருக்கிறது. திருநெல்வேலி மாநகரில் மணிமூர்த்தீஸ்வரம், வெள்ளக்கோயில், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் ஆற்றங்கரைகளில் இத்தகைய மணல்பரப்புகளை தற்போது காணலாம்.
மேலும் பல இடங்களில் ஆற்றங்கரையில் செடி, கொடிகள், குப்பைகள் அடித்து செல்லப்பட்டதாலும் வெண்மணல் பரப்பு வெளியே தலைகாட்டுகிறது. 30 ஆண்டுகளுக்குமுன் காணப்பட்ட மணல்வெளியை போன்று தற்போதும் மண்வளம் உருவாகியிருக்கும் நிலையில் அதை மீண்டும் அள்ளுவதில் சிலர் அச்சமின்றி ஈடுபடுகிறார்கள்.
அரசியல் அதிகாரம், அரசு அதிகாரிகளின் அக்கறை இன்மையும், காவல்துறையினர் கண்டுகொள்ளாமை போன்றவற்றை தங்களுக்கு சாதமாக்கி கொண்டு மணல் கொள்ளையில் சிலர் ஈடுபடுவது குறித்து ஆற்றங்கரையோரத்திலுள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஆற்றங்கரையில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தன்னார்வமாக இளைஞர்கள் சிலர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
கொக்கிரகுளம் பகுதியில் ஆற்றில் மணல் திருட்டு தொடர்பாக அங்குள்ள தொல்காப்பியர் தெருவில் கரும்பலகையில் எச்சரிக்கை அறிவிப்பு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இதையாரும் கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதன் அருகேதான் அமைந்துள்ளது.
வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு ஆற்றங்கரையில் தேங்கியுள்ள வெண்மணல் பரப்பை பாதுகாக்க அரசுத்துறைகளும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா? என்பது இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.