புதுடில்லி, தமிழகத்தில், ஆளும் தி.மு.க.,வினர் நடத்தும், ‘நீட்’ எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்காக தேசிய அளவில், நீட் எனப்படும், நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு ஆளும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன், நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தையும், தி.மு.க., நடத்தி வருகிறது.
அதற்கு எதிராக, எம்.எல்.ரவி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனு:
நீட் நுழைவு தேர்வை எதிர்த்து, 50 நாட்களில், 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கப்படும் என, தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக, மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்தும் வாங்குகின்றனர்.
பெற்றோரின் ஒப்புதல் பெறாமல், மாணவர்களிடம் இருந்து கையெழுத்து வாங்குகின்றனர். அவர்களிடம், நீட் நுழைவு தேர்வுக்கு எதிரான கருத்தை விதைக்கின்றனர். இது, மாணவர்களிடையே குழப்பத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தும். அவர்களுடைய வாழ்க்கையையும் பாதிக்கலாம். எனவே, நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
இதுபோன்ற விவகாரத்தை, பொதுநலன் வழக்கு என்ற பெயரில் கொண்டு வர முடியாது. அதனால், இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. இதுபோன்ற இயக்கங்களால், எந்த ஒரு கொள்கையிலும் பாதிப்பு ஏற்படாது.
மாணவர்களிடம் மன குழப்பம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாணவர்கள் மிகவும் தெளிவானவர்கள். அவர்களுக்கு அனைத்து விஷயங்களும் நன்கு தெரியும்.
நன்கு திட்டமிட்டு, நாடு முழுதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தால், அதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்