நாட்டுக்காக 26 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த முன்னாள் ராணுவ வீரர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார்.
பெலகாவி மாவட்டம், பைலஹொங்களின் இஞ்சலை சேர்ந்தவர் பசப்பா ஜகாதி. ராணுவத்தில் 26 ஆண்டுகள் நாட்டுக்காக சேவை செய்து வந்தார்.
அதன் பின், தன் சொந்த ஊருக்கு வந்த பசப்பா ஜகாதி, தனக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ரசாயனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் செலவு அதிகரிக்கும். நிலம் வளத்தை இழக்கிறது. அதனால் சாண உரம், மண்புழு உரம் ஆகியவற்றை நானே தயாரித்து பயன்படுத்துவதால், குறைந்த செலவில் நல்ல மகசூல் பெற முடிகிறது.
ரசாயனங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால், அதிக வருமானம் பெறலாம். இருப்பினும், நச்சு இல்லாத உணவு உற்பத்தி முக்கியமானது. எனவே, விவசாயிகள் இயற்கைக்கு திரும்ப வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பூண்டு, கொத்தமல்லி, கீரை உட்பட பல காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்கிறேன்.
வாரந்தோறும் பைலஹொங்கலில் நடக்கும் இயற்கை விவசாய திருவிழாவில் விற்று வருகிறேன். நல்ல வருமானம் கிடைக்கிறது.
ஆழ்துளை கிணறு மூலம் பயிர்களுக்கு போதிய நீர் பாசனம் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement