ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’.
இத்திரைப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் தானே இந்தியில் டப்பிங்கும் பேசியிருக்கும். இந்நிலையில் இதன் வெளியீட்டையொட்டி இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விஜய்சேதுபதி, கத்ரீனா ஃகைஃப் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, “என்னுடைய ’96’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், ‘ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் படம் இயக்கியிருக்கிறார்’ எனக் கூறினார். அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது.
ஒருநாள் இவரிடம் பணியாற்ற வேண்டும் என ஆசையிருந்தது. பின்னர் அவர் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையைச் சொன்னார் பிடித்திருந்தது. இருவரும் சேர்ந்து பணியாற்றினோம். நான் துபாயில் வேலை பார்த்தபோது கொஞ்சம் இந்தி தெரியும். அதை வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி கற்று இப்படத்திற்கு இந்தியிலும் நானே டப் செய்துள்ளேன்.” என்றார்.
இதையடுத்து பத்திரிக்கையாளர் ஒருவர், ‘இந்தி படிக்க வேண்டாம் என்பது தமிழ்நாட்டில் நீண்ட காலமாகச் சொல்லப்படுகிறது’ என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார். உடனே இடைமறித்த விஜய் சேதுபதி, “இதுபோன்ற கேள்வியை அமீர்கானிடமும் கேட்டீர்கள்.

ஏன் இந்தக் கேள்வியை இப்போது என்னிடம் கேட்க வேண்டும். என்னைப் போன்றவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணம் என்ன? தமிழ்நாடு இந்தியைத் திணிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறது. படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இங்கு பலர் இந்தி படிக்கிறார்கள். இந்தி படிப்பதற்கும், திணிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.