பூமியின் பரப்பில் சுரண்டிய வளங்கள் போதாது எனப் பூமியின் மையத்தில் இருக்கும் `நோவா கேஸ்’ என்னும் ஆற்றல்மிக்க வாயுவை எடுத்து பணமீட்டத் திட்டமிடுகிறது ஒரு பெரும் நிறுவனம். இதனால் பேரழிவு வரும் என்பது தெரிந்தும் பூமியில் விழுந்த அதிசய வேற்றுகிரக உலோகம் ஒன்றைப் பயன்படுத்தி இதைச் செய்கிறான் அந்த கார்ப்பரேட் வில்லன். அந்த உலோகத்தை மீட்கப் பூமிக்கு ரகசிய மிஷனில் வரும் ஒரு ஏலியனுக்கு உதவுகிறது தமிழ் (சிவகார்த்திகேயன்) மற்றும் நண்பர்கள் குழு. பேரழிவிலிருந்து பூமியை மீட்டானா இந்த `அயலான்’?
தனக்கேயான டிரேட்மார்க் குறும்புத்தனத்துடன் ஜாலி மோடில் வசீகரிக்கிறார் சிவகார்த்திகேயன். ஏலியனுடனான அழுத்தமான காட்சிகளில் கலங்கடிக்கிறார். ஆல்ரவுண்டராக படத்தை தாங்கிப்பிடிப்பது அவர்தான். சிவகார்த்திகேயனுடன் பார்ட்னர்ஷிப் போட்டு நகைச்சுவை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பணியில் கருணாகரன், யோகிபாபு, கோதண்டம். அதை முடிந்தளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ‘ஹீரோவுக்கு நாயகி இல்லாமல் எப்படி?’ என்ற கேள்விக்குப் பதிலாக மட்டுமே வந்து போகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

வடஇந்திய நடிகர்களை வில்லனாக நடிக்கவைக்கும் பழைய வழக்கமும் இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்திருக்கிறது. கம்பீரமான உடல்மொழி மட்டும் போதுமென இருக்கும் டெம்ப்ளேட் வில்லனாகவே வந்துசெல்கிறார் சரத் கேல்கர். இவர்கள் அனைவரையும் விட நம்மை அதிகம் கவர்வது அந்த ஏலியன் ‘டாட்டூ’தான். சித்தார்த்தின் பின்னணி குரல் அதற்குப் பக்கபலம் சேர்த்திருக்கிறது. குறும்பாகச் சுட்டித்தனமும் செய்யவேண்டும், சீரியஸான உணர்வுகளையும் கடத்த வேண்டும். அதை மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சித்தார்த். VFX என்பதையே மறந்து ஒரு கதாபாத்திரமாக அந்த ஏலியனுடன் நம்மால் ஒன்ற முடிவது Phantom FX டீமின் அபார உழைப்பிற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. குழந்தைகளின் ஃபேவரைட் கதாபாத்திரமாக ‘டாட்டூ’ வலம் வரப்போவது உறுதி.
ஓப்பனிங் சாங், ஹீரோவை மோட்டிவேட் செய்யும் ஹீரோயின், நகைச்சுவைக்குக் கைகொடுக்கும் நண்பர்கள், கார்ப்பரேட் வில்லன், அவ்வப்போது கொஞ்சம் கருத்து எனத் தமிழ் சினிமா வழக்கங்களை மீறாமல் கமர்ஷியல் மீட்டரில் ஜனரஞ்சகமான ஒரு ஏலியன் படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். முதல் பாதியில் அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் & கோ உடன் ஏலியன் செய்யும் அலப்பறைகள் ரகளையான அத்தியாயம்.
ஆனால், இரண்டாம் பாதியில் ஏலியன் படமா, சூப்பர்ஹீரோ படமா என்ற குழப்பத்தில் சிக்கி நிற்கிறது படம். முதல் பாதியின் முக்கிய ஹைலைட்டாக இருந்த சிவகார்த்திகேயன் – ஏலியன் காட்சிகள் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். பல வருடங்களாகத் தயாரிப்பில் இருப்பதாலோ என்னவோ சில ஐடியாக்களும் காட்சியமைப்புகளும் அவுட்டேட் ஆன உணர்வு ஏற்படுகிறது.

சயின்ஸ் பிக்ஷன் படம் என்றாலும், ஏகப்பட்ட தொழில்நுட்பங்களைப் போகிற போக்கில் அறிமுகப்படுத்திய விதமும், மிகையாக சூப்பர் பவர்களை மட்டுமே பயன்படுத்தும் ஆக்ஷன் காட்சிகளும் சோர்வையே ஏற்படுத்துகின்றன. இப்படியான கதைக்களத்திற்கு வில்லனும் அவரது பின்னணியும் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அதிலும் ஈஷா கோபிக்கர் ஆக்ஷன் காட்சிகளில் சண்டைபோட மட்டுமே தலைகாட்டுகிறார். கடைசிவரை அவரைப்பற்றி எதுவுமே நமக்குத் தெரியவில்லை. இன்றைய சூழலில் சூழலியல் பற்றி பேசவேண்டியது மிகவும் அவசியமானதாகவே இருக்கிறது. ஆனால், ஏலியன் பேசும் சில வசனங்களுடன் மட்டுமே அதை அடக்கிவிட்டது ஏமாற்றம். அதே சமயம், மெசேஜ் சொல்கிறேன் என்பதாக இயற்கை விவசாயம், நகர வாழ்க்கையை விமர்சிக்கும் வசனங்கள்/காட்சிகள் என வாட்ஸ்அப் பார்வேர்டு ரக கருத்துகள் மைனஸ்.
ஆனால், தொழில்நுட்ப ரீதியாக எதிலும் பெரிதாக குறை வைக்கவில்லை படம். பூம்பாறை மலைக்கிராமம், சென்னை பெருநகரம், அதிநவீன ஆராய்ச்சி கூடங்கள் என ஒவ்வொன்றையும் அதற்கான அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது நீரவ் ஷாவின் கேமரா. வாட்டர் டேங்க் மேல் இருக்கும் வீடு, நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இயங்கும் ஆய்வுக்கூடங்கள் எனக் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பும் அனைத்து ஃப்ரேமிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஹாலிவுட் ஆக்ஷன் படங்களுக்கு நிகரான பின்னணி இசையைப் படத்திற்குக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால், பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஸ்டண்ட் காட்சிகளும் அன்பறிவின் சமீபத்திய பெஸ்ட்டுக்கு அப்டேட் ஆகாத உணர்வையே விட்டுச்செல்கிறது.

பொங்கலுக்கு குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்க அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கும் படம்தான். ஆனால், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ஏலியன் ஜானரில் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுத்த தமிழ்ப்படமாகக் காலத்திற்கும் தடம் பதித்திருக்கும். மொத்தத்தில் ஜாலி மோடில் கவரும் `அயலான்’ ஆக்ஷன் மோடில் சறுக்குகிறான்.