சென்னை: வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பாக வரும் 19-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
இது தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கடந்த 9, 10-ம் தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும், இது தொடர்பான வழக்கில் மக்கள் நலன் கருதி, ஜன.19-ம்தேதி வரை வேலைநிறுத்தத்தை தள்ளிவைப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, 4-ம் கட்டபேச்சுவார்த்தை வரும் 19-ம் தேதி பகல்12 மணியளவில், தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், அடுத்த நாள் முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கமும், அமைதியான வழியில் போராட்டத்தைத் தொடர்வோம் என்றுசிஐடியு தொழிற்சங்கமும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.