அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த பைலட் மேடிசன் மார்ஷ் மிஸ் அமெரிக்க அழகிப் பட்டத்துக்காகப் போட்டியிட உள்ள முதல் அதிகாரி என்ற அங்கீகாரம் பெற்றுள்ளார்.
22 வயதான மேடிசன் மார்ஷ், அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே, பைலட்டாக வேண்டும் என்ற கனவு மேடிசனுக்கு இருந்தது.
அவருடைய பெற்றோர் மேடிசனின் 13 வயதில் விண்வெளி முகாமுக்கு அனுப்பி, விண்வெளி வீரர்களையும் போர் விமானிகளையும் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

தன் கனவை நிறைவேற்றும் முனைப்போடு இருந்த மேடிசன் விமானப்படை அகாடமியில் இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். பட்டம் பெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு 2023 மே மாதம் `மிஸ் கொலராடோ அழகிப் பட்டம்’ வென்றார்.
அதன்பின் ஹார்வர்டு கென்னடி பள்ளியில், பப்ளிக் பாலிசி (Public Policy) பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். விமானப் படை பிரிவில், செகண்ட் லெப்டினன்டாகச் சேர்ந்தவர், அதேவேளையில் மிஸ் அமெரிக்க அழகிப் போட்டிக்கான பயிற்சியும் பெற்று வந்தார்.
இவர் ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் ஃபுளோரிடா அரங்கில் நடக்கவிருக்கும் மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில், 49 போட்டியாளர்களுடன் இணைந்து போட்டியிட உள்ளார்.
அமெரிக்க விமானப் படையில் பணிபுரிந்துகொண்டு அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதல் விமானப்படை அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இது குறித்து மேடிசன் மார்ஷ் கூறுகையில் “என் வாழ்வில் பிடித்த இரண்டு பக்கங்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு பயணிப்பது அற்புதமான அனுபவம்.

விமானப்படை அகாடமியில் சேர்ந்த பின், படிப்புக்கு அப்பாற்பட்ட போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்தேன்.
நான் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் மற்றும் ராணுவத்துக்காக ஜிம்மில் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற என் விருப்பங்கள் அழகிப் போட்டிப் பயிற்சியுடன் ஒத்துப் போகின்றன’’ என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ராணுவத்துக்கந்த் தன் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதால் அதிகப்படியான மெனக்கெடல்கள் தேவைப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு எதிர்காலத்தில் தான் டாப் கன் போர் விமானியாக (Top Gun fighter pilot) வேண்டும் என்று மேடிசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.