ஹைதராபாத்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதே சரியான வழியாகும். தெலங்கானாவில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட தொகுதிகளில் வெறும் 46% வாக்குகளே பதிவானது. இனி இவ்வாறு நிகழக்கூடாது.
வாக்குரிமை பெற்ற அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில், சில வேட்பாளர்கள், “எனக்கு வாக்களிக்காவிடில் தற்கொலை செய்து கொள்வேன்” என்றுகூட வாக்காளர்களை மிரட்டி உள்ளனர். இதுபோன்ற மிரட்டல்களுக்கு வாக்காளர்கள் பயப்படக் கூடாது. வாக்களிப்பதே நம்முடைய முதல் கடமை என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.