கியான்வாபி மசூதி தொடர்பான தொல்லியல் துறை அறிக்கை தீர்ப்பு அல்ல: மசூதி குழு செயலாளர் முகமது யாசின்

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் உள்ள கியான்வாபி மசூதி, முகலாய மன்னர்களால் அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்திய ஏஎஸ்ஐ, தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதன் நகல்கள் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டன.

அந்த அறிக்கையில், கியான்வாபி மசூதி 17-ம் நூற்றாண்டில் கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கள ஆய்வின்போது கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமான் இன்டிஜாமியா மசூதி குழு செயலாளர் முகமது யாசின் கூறும்போது, “இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்திருப்பது ஒரு அறிக்கைதான். இது தீர்ப்பு அல்ல. இது தொடர்பாக பல்வேறு அறிக்கைகள் இருக்கலாம். இந்த விவகாரத்தில் அவையெல்லாம் இறுதியானதாக இருக்க முடியாது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு) சட்டத்தை சுட்டிக்காட்டி எங்கள் தரப்பு கருத்தை தெரிவிப்போம்’’ என்றார்.

அந்த சிறப்பு சட்டமானது, அயோத்தி ராமர் கோயில் தவிர நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்தவழிபாட்டுத் தலங்களை மாற்றுவதைத் தடுக்க வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.