வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால் நாளை தனது குடும்பத்தினருடன் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று தரிசிக்க உள்ளார். அவருடன் பஞ்சாப் முதல்வரும் உடன் செல்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாள்தோறும் ராமர்கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனிடையே டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்கெஜ்ரிவால் கூறுகையில், நாளை (12-ம் தேதி) மனைவி மற்றும் பெற்றோருடன் அயோத்தி சென்று ராமர் கோவிலை தரிசிக்க உள்ளதாக தெரிவித்தார்.அவருடன் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உடன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ,காங்., மயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, ஓபி ராஜ்பார் தலைமையிலான எஸ்பிஎஸ்.பி மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அயோத்தி சென்று ராமர் கோவிலை தரிசித்தனர்.
உ.பி., மாநிலத்தின் பிரதான எதிர்கட்சியான சமஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் அதன் தலைவரான அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோர் அயோத்தி பயணத்தை புறக்கணித்தனர்.
ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் தனக்கு வரவில்லை எனவும் அதே நேரத்தில் ராமர் கோவில் தரிசிப்பதற்காக பின்னர் ஒரு நாளில் தனது குடும்பத்தினருடன் செல்ல இருப்பதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement