வெற்றியும் தோல்வியும் ஒரே நாள் தான் : ஜெயித்துக்காட்டும் ஜெயம் ரவி

குடும்பம், காதல், ஆக் ஷன் என எந்த வகை படமாக இருந்தாலும் ஜெயித்துக்காட்டி கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் நெருக்கமானவர். முதல் படம் ஜெயம் முதல் லேட்டஸ்ட் படம் சைரன் வரை கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் ஜெயம் ரவி திரை அனுபவங்களை பங்கிடுகிறார்.

* உங்கள் சைரன் படம்…
அறிமுக இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைதி என இரண்டு ரோலில் நடித்துள்ளேன். முதல் முறையா நடுத்தர வயதில் கிரே கலரில் நடித்துள்ளேன்.

* சைரன் தலைப்பு ஏன்?
நான் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர் ரோல் நடித்துள்ளேன். இந்த வாகனத்தின் சைரன் பார்த்து எல்லாரும் கும்பிட்டு உயிர காப்பாத்தனும் என்று வேண்டி வழிவிடுவாங்க. இன்னொரு சைரன் போலீஸ் வண்டியில் ஒலிப்பது. இந்த சைரன் ஒலிப்பது எங்கயோ ஏதோ பிரச்னை, அசம்பாவிதம் அதை சரி செய்யப் போகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த இரண்டு சைரன்களுக்கும் இடையில் நடக்கும் போட்டா போட்டி தான் இந்த சைரன் கதை. அதனால் தான் இப்படி ஒரு தலைப்பு.

* அதிகமா புதுமுக இயக்குனர்கள் படத்தில் நடிப்பது பற்றி
திறமை சாலிகள் பலர் இருக்காங்க. அதை கண்டு பிடித்து வாய்ப்பு கொடுக்கணும். சைரன் பட இயக்குனர் விஸ்காம் படித்தவர். நானும் விஸ்காம் படித்தவன். எனக்கு தெரியும் அங்கே எந்த மாதிரியான பயிற்சி கிடைக்கும் என்று. மேலும் இவர் விஸ்வாசம் பட வசனம் எழுதியவர். ஒரு எழுத்தாளருடன் பயணிப்பது மகிழ்ச்சி.

* கீர்த்தி சுரேஷ் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளாரா
கீர்த்தி எடை எல்லாம் போட்டு, இந்த படத்தில் போலீஸ் கேரக்டர் நல்லா நடிச்சிருக்காங்க. நான் ஒரு கைதியா இந்த படத்தில் வரேன். சைரன் ஒரு எளிமையான கதை தான்.

* சினிமா குடும்பத்தில் இருந்து வந்த உங்களுக்கு இருந்த சவால்கள்
என் அப்பா கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வந்தவர். நான் பிறந்ததே ஓட்டு வீட்டில் தான். அவர் உழைத்து எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தார். அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கூடாது என்று நினைப்பவன். யார் மகனாக இருந்தாலும் நம்ம திறமையை வைத்து இங்க நாம் பேர் எடுக்கணும்.

* எப்போ இயக்குனர் ஆக போறிங்க
கதை ரெடியா இருக்கு. ஒன்று நான் நடிப்பேன். அடுத்து யோகி பாபுவுக்கு கதை வச்சிருக்கேன். அடுத்து ஒரு கதை பொதுவா பண்ணிருகேன்.

* மீண்டும் மணிரத்னம் இயக் கத்தில் நடிப்பது பற்றி..?
ரொம்ப சந்தோசம். ஒரு கேமியோ ரோல் தான் நடிக்கிறேன். அவருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஒரு சிறந்த இயக்குனர் அவர். என்னுள் இருப்பதை வெளி கொண்டு வரும் இயக்குணர் மணி சார்

* உங்கள் அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 எப்போது தொடங்கும்
அது பெரிய செட் அப். நிறைய நடிகர்கள், பெரிய பட்ஜெட். நடிகர்களை மொத்தமாக அழைத்து சென்று படத்தை முடித்து கொண்டு வர வேண்டும். அதற்கான வேலை நடக்கிறது.

* ஜெயம் படம் முதல் சைரன் வரை 22 வருட திரை அனுபவத்தில் வெற்றி தோல்விகள்…
வெற்றி தோல்வி இரண்டுமே எனக்கு அந்த ஒரு நாள் தான். அடுத்த படம் என்னை நம்பி தராங்க. நடித்து வெளியான படத்தை ரொம்ப மனதில் எடுத்துக் கொண்டால் அடுத்த வேலைக்கு நான் செல்ல முடியாது.

* சமீபத்தில் வரும் புது படைப்பாளிகள் படங்கள்
இப்போது திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கு. குட்நைட், பார்க்கிங் போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தருது. பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாமல் தியேட்டரில் ஓடிய படங்கள் இவை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.