மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு செயலி: புதிய வசதியை தொடங்கியது மின்வாரியம்

சென்னை: மொபைல் செயலி மூலம் மின்சார தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டணம் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான புதிய வசதியை மின்வாரியம் தொடங்கி உள்ளது.

மின்நுகர்வோர் மின்தடை, கூடுதல் மின்கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை, சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மின்னகத்தில் ஒரு ஷிப்டுக்கு 60 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஒரே சமயத்தில் அதிகம் பேர் புகார் அளிக்க தொடர்பு கொள்ளும்போது பலருக்கு இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், புகார் அளிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

மின்கட்டணத்தை எப்போதுவேண்டுமானாலும் செலுத்துவதற்கு வசதியாக, ‘TANGEDCO’ என்ற மொபைல் போன் செயலியை மின்வாரியம் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த செயலியில் புகார்களை தெரிவிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் புகார் அளிக்கலாம்: இதன்படி, மின்தடை, மீட்டர் பழுது, மின்கட்டணம், மின்னழுத்தப் பிரச்சினைகள் குறித்தும், சேதமடைந்த மின்கம்பம், மின்கம்பி அறுந்து விழுதல், மின் திருட்டு, மின்சார தீ விபத்து உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த செயலியில் நுகர்வோர் புகார் அளிக்கலாம்.

இந்த செயலியில் மீட்டர், மின்கட்டண புகார்களுக்கு மின்இணைப்பு எண் பதிவிட வேண்டும். மற்ற சேவைகளுக்கான புகாரை, மின்இணைப்பு எண் குறிப்பிடாமலும் பதிவிடலாம்.

அவ்வாறு பதிவிடும்போது எந்த இடத்தில் இருந்து செயலியை இயக்குகிறோமோ, மேப் மூலமாக சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலக முகவரி செயலியில் தானாகவே வந்து விடும். அதற்குகீழ், இடத்தைக் குறிப்பிட்டு புகாரை பதிவிடலாம்.

புகைப்படமும் பதிவிடலாம்: மேலும், புகார் தொடர்பாக மொபைல் போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் இந்த செயலியில் பதிவிடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.