ஊழல் வழக்கு: காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தொடர்புடைய 30 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

புதுடெல்லி,

2018-2019 வரை காஷ்மீர் கவர்னராக பணியாற்றியவர் சத்ய பால் மாலிக். அந்த சமயத்தில் 2 கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றதாக சத்ய பால் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த 2 கோப்புகளில் ஒன்று காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றில் இருந்து 624 மெகாவாட் நீர் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான ஒப்புதல் கோப்பு ஆகும். இந்த விவகாரத்தில் காஷ்மீர் அரசு 2022-ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணையை கோரியது. இதனிடையே நீர் மின் திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லியில் உள்ள அவரது இல்லம், காஷ்மீரில் இருக்கும் அவருக்கு சொந்தமான இடங்கள் உள்பட மொத்தம் 30 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறுகையில், “2019-ம் ஆண்டில் கிரு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் பிராஜெக்ட் (ஹெப்) என்ற திட்டத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்துக்கு சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது” என்றார்.

சமீபத்தில் சத்யபால் மாலிக் அளித்த பேட்டி ஒன்றில், துணை ராணுவப் படையினர் 40 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் அலட்சியமே காரணம் என்றும், இது குறித்து பேச வேண்டாம் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.