புதுடெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் கூட்டுறவுத் துறையால் 11 மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது இது உலகின் மிகப்பெரிய தானியசேமிப்புத் திட்டமாக இருக்கும் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்த திட்டத்துக்கான தொடக்க விழா டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
இன்று நமது விவசாயிகளுக்காக உலகின் மிகப்பெரிய சேமிப்புகிடங்கு திட்டத்தை அறிமுகம்செய்துள்ளோம். இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்.
நாட்டில் போதிய சேமிப்புக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மத்தியில் ஆட்சி செய்த முந்தைய அரசுகள் இந்த பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தவில்லை. ஆனால் இன்று கூட்டுறவுத் துறை மூலம் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்பு திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 700லட்சம் டன் சேமிப்பு திறன் உருவாக்கப்படும். இந்த முயற்சிக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படும். இந்தத் திட்டம்அமலுக்கு வரும்போது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கான சிறந்த கிடங்குகள் நம்மிடையே இருக்கும்.
அதிக சேமிப்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைத்து, சந்தை விலைகள் லாபகரமாக இருக்கும்போது பொருட்களை விற்க முடியும்.
இவை அனைத்தும் வேளாண்கடன் சங்கங்களின் உதவியால் நடந்துள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேளாண் துறையில் நல்ல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும், அருமையான கிடங்கு வசதிகளும்தேவை. அதை பாஜக தலைமையிலான அரசு நிறைவேற்றும். எனவே,நாம், விவசாயத்துறையை நவீனப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் நாட்டிலுள்ள தொடக்க வேளாண் கடன் கூட்டுறவுசங்கங்களைத் தயார் செய்து வருகிறோம். இந்த அமைப்புகள் பிரதமமந்திரியின் ஜன் அவுஷதி மையங்களாகவும் செயல்படும். மேலும் தற்போது நாட்டிலுள்ள 18 ஆயிரம்தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.