கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா அத்திமுகம் ஊராட்சி பென்னாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டப்பா மகன் வெங்கடாஜலபதி. சட்டப்படிப்பு படித்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் லகுமப்பா மகள் லாவண்யா, பிளஸ் டூ படித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் மகளைக் காணவில்லை என ஓசூர் மகளிர் போலீஸில் லாவண்யாவின் தந்தை புகாரளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து தேடி வந்த போலீஸார், இருவரையும் மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது லாவண்யாவுக்கு திருமண வயது ஆகாததால், திருமண வயது வந்த பின்பு திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை பெற்றோருடன் இருக்க வேண்டும் என அறிவுரை கூறி, அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் ஒரு வருடம் கழிந்த நிலையில், லாவண்யாவை வெங்கடாஜலபதி திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகத் தெரிகிறது.

இதனால் லாவண்யா, `வெங்கடாஜலபதி என்னை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன்’ எனக் கூறிக்கொண்டு, கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, வெங்கடாஜலபதி வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்து பேரிகை இன்ஸ்பெக்டர் தேவி இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் பேசினார். பின்னர் வெங்கடாஜலபதி- லாவண்யாவைத் திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் ஓசூர் அழைத்துச் சென்று பெற்றோர், பொதுமக்கள் முன்னிலையில் போலீஸார் திருமணம் செய்து வைத்தனர்.