மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தினா பகாடே(40) என்ற பெண்ணிற்கு 19 வயதில் பூமிகா என்ற மகள் உட்பட 3 பிள்ளைகள். தினா வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இதில் பூமிகா அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார். அவரைத் திருமணம் செய்ய பூமிகா விரும்பினார். ஆனால் பூமிகா காதலிக்கும் வாலிபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபருடனான தொடர்பை கைவிடும்படி தனது மகளிடம் தினா கேட்டுக்கொண்டார். ஆனால் பூமிகா கைவிட மறுத்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே இரவில் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. தாய் மகள் இடையே ஏற்பட்ட சண்டையில், பூமிகா தனது தாயாரின் விரலை கடித்துவிட்டார்.
இதனால் ஆத்திரத்தில் தினா தனது மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். சம்பவத்தை அவரது மற்ற இரண்டு பிள்ளைகளும் பார்த்துக்கொண்டிருந்தனர். பூமிகாவை கொலை செய்த பிறகு தனது மகள் ஆஸ்துமா பிரச்னையால் திடீரென இறந்துவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்களிடமும், போலீஸாரிடமும் தினா தெரிவித்தார். போலீஸார் பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் ஆரம்பத்தில் விபத்து மரணம் என்று வழக்கு பதிவுசெய்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் பூமிகாவின் கழுத்தில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தினாவை பிடித்து விசாரித்தனர். தினாவின் கையில் பூமிகா கடித்த காயம் இருந்தது. காயம் எப்படி ஏற்பட்டது என்று கேட்டதற்கு, பூமிகாவிற்கு ஆஸ்துமா ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற முயன்றபோது கதவு இடைவெளியில் சிக்கி ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் அவரை தீவிரமாக விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டார். தாய் மகள் இடையே சண்டை நடந்ததை தினாவின் மற்ற இரண்டு பிள்ளைகளும் போலீஸாரிடம் உறுதிபடுத்தினர். அதையடுத்து, தினாவை கைதுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.