சென்னை: “தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. பொன்முடியே மீண்டும் எம்எல்ஏவாக தொடர்கிறார்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழக தேர்தல் நிலவரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.
அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதி உடனடியாக மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. மாவட்டங்களில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க வீடு வீடாக சென்று படிவம் விநியோகிக்கப்படும். தமிழகத்துக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு. கடந்த முறை தமிழகத்துக்கு இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது.
விளவங்கோடு தொகுதிக்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. பொன்முடியே மீண்டும் எம்எல்ஏவாக தொடர்கிறார். தேர்தல் ஆணையத்துக்கு அளித்த பட்டியலில் திருக்கோவிலூர் தொகுதி தவறுதலாக இடம்பெற்றுவிட்டது. அதை உடனே நீக்கிவிட்டோம்.
டீப் ஃபேக் வைத்து தவறுதலாக பிரச்சாரம் செய்தால் அதனை தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கலாம். சட்டப்படி அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இனி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உன்னிப்பாக கண்காணிப்படும். சந்தேகப்படும்படியான பரிவர்த்தனைகள் நடந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். | தேர்தல் அட்டவணை > ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் – தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு