கேஜ்ரிவால் கைது: இண்டியா கூட்டணி தேர்தல் ஆணையத்திடம் முறையிடும்- மம்தா

கொல்கத்தா: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கும் நோக்கில், சுனிதா கேஜ்ரிவாலிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன்.

எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதேநேரத்தில், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றால் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பாஜகவில் இணைந்த பிறகு தண்டிக்கப்படுவதில்லை. அதோடு, முறைகேடுகளைத் தொடரவும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான மூர்க்கத்தனமான, அப்பட்டமான தாக்குதல் இது.

நமது இண்டியா கூட்டணி இன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முறையிடும். தேர்தல் ஆணையத்துடனான இந்த முக்கிய சந்திப்பில் பங்கேற்க, திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் டெரெக் ஓ பிரையன், முகம்மது நடிமுல் ஹாக் ஆகியோரை நியமித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், “நீங்கள் கேஜ்ரிவாலை கைது செய்யலாம். அவரது சிந்தனையை எவ்வாறு கைது செய்ய முடியும். கேஜ்ரிவால் தனி நபர் அல்ல. அவர் ஒரு சிந்தனை; கொள்கை. அவருக்கு ஆதரவாக நாங்கள் பாறையைப் போன்று நிற்போம். புரட்சி ஓங்குக” என தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், “ஜனநாயகத்துக்கு எதிரான இந்த வன்முறை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல்கள் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெறம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.