உலகம் முழுவதும் நிலம், நீர் என எங்கும் பிரமிக்க வைக்கக்கூடிய வகையில் விலங்குகள் வாழ்கின்றன. அந்த விலங்குகளை புகைப்படத்தில் கண்டு பலர் ஆச்சர்யப்படுகின்றனர். அதுவே இந்தியாவில் மட்டும் இருக்கக்கூடிய உயிரினங்களைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதில் வேதனையான தகவல் என்னவென்றால் இந்த உயிரினங்களில் பல அழிவின் விளிம்பில் உள்ளன.
உலக நாடுகளில் இல்லாத இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய தனித்துவமான சில உயிரினங்களைக் குறித்து பார்ப்போம்…
* சிங்கவால் குரங்கு (Lion tailed macaque):
உலகின் பழைய குரங்கு இனங்களாகக் கருதப்படும் இவை, தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரைச் சேர்ந்தது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் காணப்படுகிறது.
தாவர உண்ணிகளான சிங்கவால் குரங்கு இலை, மொட்டுகள் மற்றும் பூக்களின் விதைகளை உண்ணும். எப்போதாவது அரிதாகப் பூச்சிகளை உண்ணும். அகன்ற தோள்பட்டைகள், கறுப்பு அல்லது சாம்பல் நிற ரோமங்கள் கொண்டு சிங்கம் போன்ற வாலை கொண்டிருக்கின்றன.

* நீலகிரி வரையாடு (Nilgiri Tahr):
தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும். இதன் தனித்துவமான நிறத்திற்காகவும், தோற்றத்திற்காகவும் பிரபலமாகக் கருதப்படுகிறது.
*காஷ்மீர் ஹங்குல் (Kashmir hangul):
சிவப்பு மான்களின் தனித்துவமான இனமாக இவை `காஷ்மீர் ஸ்டாக்’ என்றும் அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போலவே ஜம்மு காஷ்மீரில் காணப்படுகிறது. பலவகையான தாவரங்கள், புற்கள், இலைகளை உண்பதோடு, புதர்களில் வாழும். 1,700 முதல் 4,000 மீட்டர் உயரத்தில் வாழ்வதை விரும்புகின்றன.
*கங்கை டால்பின் (Gangetic Dolphin):
கங்கையில் வாழும் இவை, ஆமைகள் முதலைகள் மற்றும் சுறாக்களுடன் தோன்றிய உலகின் பழைமையான உயிரினங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இவற்றால் நன்னீரில் மட்டுமே வாழமுடியும். அல்ட்ராசோனிக் ஒலிகளை எழுப்புவதன் மூலம் தனது இரையைக் கடலில் வேட்டையாடி பிடிக்கிறது. 5 முதல் 6 அடி நீளம் வரை வளரக்கூடியவை.
* சங்காய் (Sangai):
இவை மணிப்பூரில் காணப்படுகின்றன. இதனை மணிப்பூர் `முன் மண்டைக்கொம்பு உடைய மான்’ (brow-antlered deer) அல்லது நடனமாடும் மான் என்று அழைக்கின்றனர். இதன் அழகே அதன் தனித்துவமான முன்மண்டையில் உள்ள கொம்புதான். பெரிய தோற்றமுடைய இம்மானின் கொம்புகளில் பல் கிளைகள் இருக்கும்.

* இந்திய மூக்குக்கொம்பன் (Greater One Horned Rhino):
இந்தியக் காண்டாமிருகம் அல்லது ஒற்றைக்கொம்பன் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த காண்டாமிருகத்திற்கு 8 முதல் 25 அங்குல நீளமுள்ள கறுப்பு நிற ஒற்றைக் கொம்பு இருக்கும். சாம்பல் பழுப்பு நிறத்தில் தோல் இருப்பதால் கவசம் பூசப்பட்ட தோற்றத்தை அளிக்கிறது. புற்கள், இலைகள், தண்டுகள் மற்றும் நீர்வாழ் தாவரங்களை உண்ணும்.
* இந்திய ராட்சத அணில் (Indain Giant squirrel):
மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் சத்புரா மலைகளில் காணப்படுகின்றன. வண்ணமயமான நிறத்தில் காணப்படும் இவை மரங்களில் சுறுசுறுப்பாக ஏறுவதோடு, மரங்களுக்கு இடையே நீண்ட தூரம் தாவிச் செல்லும் திறனுடையவை.