பனாஜி: கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தது, 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளிட்டுள்ள சுற்றறிக்கையில்,. ‘ஸ்ரீகாவோவில் ஸ்ரீலைராய் தேவி கோயிலில் ஜாத்ரா திருவிழாவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அடுத்த மூன்று நாட்களுக்கு அரசு சார்பில் நடக்க இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களையும் ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளும் இந்த உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: கோவா கோயில் திருவிழா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் மோடியும் தங்களின் வருத்தத்தையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவாவின் ஸ்ரீகாவோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவின் ஸ்ரீகாவோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனைகள்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு: இதனிடையே, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சம்பவம் நடந்த ஸ்ரீகாவோ பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதேபோல் கோவா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்தார். பின்பு நெரிசல் சம்பவம் குறித்து கூறும்போது, “துரதிருஷ்டவசமான இந்தக் கூட்ட நெரிசல் சம்பவம் இன்று அதிகாலை 4 – 5 மணியளவில் நடந்துள்ளது. கோவாவில் கூட்ட நெரிசல் சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை.
நான் சம்பவ இடத்துக்கு வந்துள்ளேன். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களையும் நான் சந்தித்தேன். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கூறியுள்ளேன். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி எனக்கு அழைத்து விவரங்களைக் கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
நடந்தது என்ன?: கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாவோ பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜாத்ரா திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவில் மக்கள் அதிகம் திரண்ட நிலையில் நெரிசல் ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மபுஸாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
லைராய் தேவி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தீ மிதிக்கும் சடங்கில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பார்வதி தேவியின் ஒரு வடிவமான லைராய் தேவியை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவுக்காக கோவா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வருவது வழக்கம். மகாராஷ்டிரா, கர்நாடகா வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவை காண வருவார்கள். அதன் காரணமாக கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தான் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.