பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து பெங்களூருவின் தொடக்க வீரர்களாக விராட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதன் காரணமாக பெங்களூரு அணியின் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் சென்னை வீரர்கள் திணறினர்.
அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் பெத்தேல் 55 ரன்னிலும், விராட் 62 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த படிக்கல் 17 ரன், ஜித்தேஷ் சர்மா 7 ரன், ரஜத் படிதார் 11 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து டிம் டேவிட் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய ஷெப்பர்ட் 14 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ஆர்.சி.பி. தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் பதிரனா 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை விளையாடியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரேவும், ஷேக் ரஷித்தும் களமிறங்கினர். ஷேக் ரஷித் 11 ரன்னிலும், அடுத்து வந்த சாம் கரன் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா களமிறங்கினார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் திரட்டியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் கேட்ச்சாகி வெளியேறினார். அடுத்து வந்த அதிரடி வீரர் டிவேன் பிரேவிஸ் முதல் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.