இந்தியாவுடனான போர் சூழலை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கெஞ்சும் நிலையை, இந்திய முப்படைகள் ஏற்படுத்தியதாக முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார். ஒரு வழியாக இந்தியா -பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தான் பணிந்திருப்பது இந்திய மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமாரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் விவரம்:
பாகிஸ்தான் விமான தளம் தாக்கப்பட்டதாக இந்திய முப்படைகள் அறிவித்திருப்பது குறித்து..
பாகிஸ்தானின் நூர்கான் விமானதளம் தாக்கப்பட்டு இருப்பதாக இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்திய அரசின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தனியார் செயற்கைக்கோள் புகைப்படங்கள், சீனாவின் செயற்கைக்கோள் முகமை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் அமெரிக்காவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் என 4 வகையான செயற்கைக்கோள் புகைப்படங்கள் அதை உறுதி செய்துள்ளன.
எதற்காக நூர்கான் விமான தளம் குறிவைக்கப்பட்டது?
எந்த விமானமும் தரை இறங்காமல் இருப்பதற்காகவும், எந்த விமானமும் அங்கிருந்து பறந்து செல்லாமல் இருப்பதற்காகவும், அந்த விமான ஓடுதளத்தில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மேலும் அங்கு தான் பாகிஸ்தானின் உளவு விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த விமானமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானிடம் அவாக்ஸ் என்ற உளவுவிமானம் உள்ளது. இந்த விமானம்தான் சுமார் 200 கிமீ சுற்றளவில் எந்த எதிரி நாட்டு விமானம், எங்கெங்கு இருக்கிறது என்பது குறித்த துல்லியமான தகவல்களை, பாகிஸ்தானின் 45 போர் விமானங்களுக்கு வழங்கும். உளவு தகவல்களை சொல்வது தான் இந்த விமானத்தின் முக்கிய பணி. இந்த விமானத்திலேயே ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இதை வானத்தில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு போகலாம்.
பாகிஸ்தான் தன்னிடம் உள்ள எஃப்16 போர் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து புதிதாக வாங்கிக் கொள்ளலாம். ஜே10, ஜே7 போன்ற நூற்றுக்கணக்கான போர் விமானங்களை சீனாவிடம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த விமானத்தை அவ்வளவு எளிதில் புதிதாக வாங்க முடியாது. இதை முழுவதுமாக தயாரிக்க வேண்டும். அதை தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். ஒரு தேன்கூட்டில் உள்ள ராணி தேனீ போன்றது. இதைத்தான் இந்தியா தாக்கியிருக்கிறது. அதில் 6 பாகிஸ்தான் விமான படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது சந்தேகமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவுக்கு வர என்ன காரணம்?
எதிரி நாட்டு ஏவுகணை தடுப்புகருவி, விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணை, 24 மணி நேரம் தயார் நிலையில் விமானப்படை, அவாக்ஸ் உளவு விமானம், எஃப் 6, ஜே7 போன்ற நவீன போர் விமானங்கள் என அனைத்து தடுப்பு கட்டமைப்புகளாலும், நமது ஏவுகணைகளை தடுக்க முடியவில்லை. பாகிஸ்தானின் உளவு விமானத்தையும் அழித்திருக்கிறோம். இந்த முறை நடந்த தாக்குதல் பாகிஸ்தான் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாதது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் உண்மையான வலிமையை சோதித்து தான் பார்த்திருக்கிறோம். இது வரலாற்று திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன்மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இதனாலேயே பதறிப்போய் உடனடியாக போரை நிறுத்த, அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கெஞ்சும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.