பிற மத பாடல்களை இப்படி பயன்படுத்துவீர்களா? – சந்தானம் படக்குழுவுக்கு நீதிபதிகள் கேள்வி

சென்னை: சந்தானம் நடித்துள்ள திரைப்படத்தின் பாடலுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல், திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் எம்ஜிடி. பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தம் இல்லாமல், வெங்கடேஸ்வர பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கியுள்ளது. சென்சார் சான்றிதழை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட பாடலில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு புதிய சென்சார் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘‘வரிகள் நீக்கப்பட்டாலும், பக்தி பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது’’ என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘திரைப்படங்களில் இதுபோல பிற மதங்களின் பாடலை பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் பெற்று பட தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்’’ என்றனர். அதன்படி, விளக்கம் பெற்ற பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர், ‘‘பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டது’’ என்று தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர். சர்ச்சை பாடல் தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனங்களான நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட், தி ஷோ பீப்பிள் ஆகியவற்றுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த பாடலை உடனே நீக்கி, ஏழுமலையான் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.