கிரேக்கத்தில் 1973-ம் ஆண்டு முடியாட்சி ஒழிப்பு அறிவிக்கப்பட்டபோது மன்னராக இருந்தவர் மன்னர் கான்ஸ்டன்டைன். இவர்தான் கிரேக்கத்தின் கடைசி மன்னர்.
முடியாட்சி ஒழிக்கப்பட்டாலும் மன்னர் குடும்பத்தினர் சடங்கு ரீதியாகப் பயன்படுத்த மரியாதைக்குரிய பட்டங்களை இன்னும் பயன்படுத்துகின்றனர். இறுதி மன்னர் கான்ஸ்டன்டைனுக்கும் ராணி ஆன்மேரிக்கும் பிறந்த 4-வது குழந்தைதான் இளவரசி தியோடோரா.

லண்டனில் பிறந்த தியோடோரா அங்கேயே வளர்ந்தார். உயர்கல்விக்காக அமெரிக்காவிற்குச் சென்ற அவர் “தியோடோரா கிரீஸ்” என்ற பெயரில் நடிப்பு வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு கிரேக்க இளவரசி தியோடோரா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேத்யூ குமார் என்ற அமெரிக்க வழக்கறிஞரை சந்தித்திருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு நிச்சயதார்த்தத்தை அறிவித்து, கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதி கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, இந்தியப் பாரம்பரியத்தில் வரும், திருமணத்திற்கு முந்தைய மஞ்சள் பூச்சு போன்ற நிகழ்வுகளை செய்துகொண்டனர்.
அந்தத் திருமணப் புகைப்படத்தை தன் சமூக ஊடகப் பக்கங்களில் இளவரசி தியோடோரா பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

யார் இந்த மேத்யூ குமார்?
தி வீக் பத்திரிகையின் ஒரு அறிக்கையின்படி, மேத்யூ குமார் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு அமெரிக்க வழக்கறிஞர். 1990-ல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷேலேந்திர குமாருக்கும் பிஜி நாட்டைச் சேர்ந்த யோலண்டா ஷெர்ரி ரிச்சர்ட்ஸ் என்பவருக்கும் பிறந்தார். அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்திருக்கிறார். கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஃபார்மார் சட்டக் குழுவின் நிறுவனராக இருக்கிறார்.