உளவுத் துறை இயக்குநர் தபன் குமார் டேகா பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய உளவுத் துறை இயக்குநர் தபன் குமார் டேகாவின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை ஓராண்டுக்கு நீடிக்கும். டேகாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளின் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்திய நிலையில், மாறிவரும் பாதுகாப்பு சூழல்களுக்கு மத்தியில் தபன் குமார் டேகாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தபன் குமார் தேகா (62) இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 1988-ம் ஆண்டு இந்திய காவல் பணி பேட்ச் அதிகாரி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு உளவுத் துறை இயக்குனரகத்தின் தலைவராக இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு அவரின் பணிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் பதவிக் காலம் நீட்டிப்பு பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு, 2025 ஜூன் 30-ம் தேதிக்கு பின்பு, டேகாவின் உளவுத்து றை இயக்குனரகத் தலைவர் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து இந்திய சேவைகள் (பிறப்பு, ஓய்வு சலுகைகள்) விதிகள் 1958-ன், FR 56 (d) மற்றும் விதி 16 (1A)-ன் தளர்வுகளின்படி அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 30-ம் தேதி (2025 ஜூன்) டேகாவின் பதவிக் காலம் நிறைவடையும் நிலையில், அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக இந்த நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உளவுத் துறை, ரா, அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் பிறரின் பதவிக் காலத்தை பொது நலன் கருதி நீட்டிக்க மேற்சொன்ன விதிகள் மத்திய அரசுக்கு அனுமதி வழங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற செயல்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார் தபன் குமார் டேகா. உளவுத் துறையின் தலைவராக பொறுப்பேற்பதற்கும் முன்பாக, இரண்டு தசாப்தங்களாக உளவுத் துறையின் செயல்பாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த 26/11 மும்பை தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட எதிர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு டேகா பொறுப்பாளராக இருந்தார். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை கையாளுவதில் திறமைவாய்ந்தவரான டேகா, கடந்த 2000-களில் நாடு முழுவதும் நடந்த வன்முறைச் செயல்களுக்கு பின்னால் இருந்த இந்திய முஜாகிதீன் தீவிரவாதக் குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினார்.

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, டேகாவின் சொந்த மாநிலமான அசாமில் எழுந்த வன்முறையைத் தொடர்ந்து, சூழ்நிலையைக் கட்டுப்படுத்த அங்கு அனுப்பப்பட்டார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை கையாளுவதில் டேகா நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் அரசின் முக்கிய நபராக அவர் இருந்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.