தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா வனப் பகுதிகளில் மழை தொடர்வதால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 9,683 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 12,819 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 109.33 அடியில் இருந்து 110.03 அடியாகவும், நீர்இருப்பு 77.46 டிஎம்சியிலிருந்து 78.45 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் அணை நீர்மட்டம் 1.51 அடியும், நீர் இருப்பு 2.13 டிஎம்சியும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.