GT vs LSG: ஒரு வழியாக லக்னோவை வெற்றி பெறவைத்த அந்த ஒரு பவுலர்! குஜராத் தோற்றது எப்படி?

நடப்பு ஐபிஎல் சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கான கோட்டா மே 21-ம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பையின் வெற்றியோடு முடிந்துவிட்டது.

குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.

மும்பைக்கு இன்னும் ஒரு போட்டியும், மற்ற மூன்று அணிகளுக்கு தலா இரண்டு போட்டிகளும் இருப்பதால், முதல் நான்கு இடங்களில் எந்த அணிக்கு எந்த இடம் என்று முடிவாகவில்லை.

கில் - பண்ட்
கில் – பண்ட்

இவ்வாறிருக்க, தற்போதைக்கு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தும், 7-வது இடத்தில இருக்கும் லக்னோவும் அகமதாபாத்தில் (மே 22) களமிறங்கின.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

லக்னோ அணியில் ஓப்பனிங் இறங்கிய எய்டன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் எப்போதும் போல தங்களின் வழக்கமான அதிரடி இன்டென்ட்டை முதல் ஓவரிலிருந்தே காட்டினார்.

விக்கெட் விடாமல் நிதானமாக ஆடிய இந்தக் கூட்டணி பவர்பிளே முடிவில் 53 ரன்கள் குவித்தது. பவர்பிளேவில் எதிர்பார்த்த ரன்கள் வரவில்லையென்றாலும், அதன்பிறகுதான் உண்மையான பவர்பிளேவைக் காட்டியது லக்னோ.

மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ்

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிக்கொண்டிருந்த இந்தக் கூட்டணியை, 10-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதத்துடன் மார்ஷ் நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு சென்றதும், மார்க்ரமின் விக்கெட்டை எடுத்து உடைத்தார் சாய் கிஷோர்.

ஆனால், அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் தான் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்ஸருக்கு அனுப்பி இனி சிக்ஸர் மழைதான் என குஜராத்துக்கு சிக்னல் கொடுத்தார்.

அடுத்த ஓவரிலேயே லக்னோ 100 ரன்களைக் கடக்க, 12-வது ஓவரில் கடைசி ஒரு பந்தைத் தவிர மற்ற அனைத்து பந்துகளையும் சிக்ஸர், ஃபோராக பறக்கவிட்டு ரஷீத் கானை நோகடித்து 86 ரன்களுக்கு சென்றார் மார்ஷ்.

இது போதும் என பிரஷர் மார்ஷ் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொண்ட பூரான், சாய் கிஷோர், ரஷீத் கான், சிராஜ் ஆகியோரின் ஓவர்களில் சிக்ஸர், ஃபோர் மழை பொழிந்து 16 ஓவர்களில் லக்னோவின் ஸ்கோரை 180-ஆக உயர்த்தினார்.

அதற்கடுத்த ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து 56 பந்துகளில் சதமடித்தார் மார்ஷ். அதற்கடுத்த ஓவரில் சிங்கிள் எடுத்து 23 பந்துகளில் அரைசதமடித்தார் பூரான்.

நிக்கோலஸ் பூரான்
நிக்கோலஸ் பூரான்

அதே ஓவரில் மார்ஷின் பேக் டு பேக் சிக்ஸருடன் லக்னோவின் ஸ்கோர் 212-க்கு சென்றது. எல்லாம் லக்னோவுக்கு நன்றாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் 19-வது ஓவரை வீசிய அர்ஷத் கான், மார்ஷை 117 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட், கடைசி ஓவரை இரண்டு சிக்ஸருடன் நிறைவு செய்ய குஜராத்துக்கு 236 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ.

இந்த சீசனில் குஜராத்துக்கு முக்கால்வாசி வெற்றிகளை அதன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே பெற்றுக்கொடுத்திருக்கின்றனர். சாய் சுதர்சன் 600+ ரன்கள், கில் 600+ ரன்கள், பட்லர் 500+ ரன்கள்.

இப்படிப்பட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொண்ட குஜராத்துக்கு 236 என்பது அவ்வளவு கடினமான இலக்கு ஒன்றும் கிடையாது.

ரன் குவிக்க வேண்டும் என்ற வேட்கையோடு களமிறங்கிய சுதர்சன் – கில் கூட்டணி முதல் ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி தனது வழக்கமான அதிரடியை ஆரம்பித்தது.

ஜாஸ் பட்லர்
ஜாஸ் பட்லர்

3-வது ஓவரில் கில்லின் ஹாட்ரிக் பவுண்டரியுடன் குஜராத்தின் ரன்வேகம் ஏறிக்கொண்டிருந்த நேரத்தில், 5-வது ஓவரில் சுதர்சனை 21 ரன்களில் விக்கெட் எடுத்து முட்டுக்கட்டை போட்டார் வில்லியம் ஓரூர்க்.

ஆனால், அடுத்து களமிறங்கிய பட்லர், பவர்பிளேவின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் இரண்டு ஃபோர் அடித்து 6 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 67-க்கு உயர்த்தியதோடு ரன்ரேட்டையும் 10-க்கு மேல் உயர்த்தினார்.

இந்த சமயத்தில்தான், 8-வது ஓவரில் ஆவேஷ் கான் குறுக்கே வந்து, கில்லை 35 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

அதேவேகத்தில், 10-வது ஓவரில் பட்லரை 33 ரன்களில் போல்டாக்கினார் ஆகாஷ் மகராஜ் சிங்.

அந்த ஓவர் முடிவில் குஜராத்தின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் என்றிருக்க, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டும், தமிழக வீரர் ஷாருக்கானும் அடுத்த 10 ஓவர்களில் 139 அடித்து அணியை வெற்றிபெற வைக்க தயாராக நின்றிருந்தனர்.

அடுத்த 6 ஓவர்களில் இருவரும் சேர்ந்து 6 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்து 16 ஓவர்களில் குஜராத்தின் ஸ்கோரை 182-ஆக உயர்த்தினர்.

ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் - ஷாருக்கான்
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் – ஷாருக்கான்

அடுத்த 4 ஓவர்களுக்கு குஜராத்தின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவை என்ற சூழலில், 17-வது ஓவரில் 38 ரன்களில் ரூதர்ஃபோர்டையும், 2 ரன்னில் தெவாட்டியாவையும் அவுட்டாக்கி ஆட்டத்தை லக்னோ பக்கம் திருப்பினார் ஓரூர்க்.

இதற்கிடையில், அதே ஓவரில் சிங்கிள் எடுத்து 22 பந்துகளில் அரைசதமடித்து லக்னோவை சற்று அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷாருக்கானை 19-வது ஓவரில் 57 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி இப்போட்டியில் குஜராத்தின் வெற்றி வாய்ப்பை முழுவதுமாகப் பறித்தார் ஆவேஷ் கான்.

வில்லியம் ஓரூர்க்
வில்லியம் ஓரூர்க்

கடைசி ஓவரில் லக்னோவின் சுட்டிக் குழந்தை ஆயுஷ் பதோனி 2 விக்கெட்டுகள் வீழ்த்த 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் மட்டுமே குவித்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குஜராத்.

லக்னோ அணியில் சதமடித்த மார்ஷ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.