உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஹாபூரில் தனியாருக்கு சொந்தமான மோனாட் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநில சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்)கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தியது. இதில் சுமார் 1,421 போலி சான்றிதழ்கள் கிடைத்தன.
இந்த வழக்கில் பல்கலையின் தலைவர் சவுத்ரி விஜயேந்திரா சிங் ஹுடா, இணை துணைவேந்தர் நிர்மல் சிங் உள்ளிட்ட 11 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எஸ்டிஎப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், இதுவரையில் சுமார் 2 லட்சம் போலி சான்றிதழ்கள் விநியோகித்திருப்பது தெரியவந்துள்ளது. தலைவர் ஹுடா மீது மேலும் 119 வழக்குகள் பதிவாகி விசாரணையில் இருப்பதும், அவருக்கு மோசடியில் சம்பாதித்த ரூ.5,000 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதும் தெரிந்துள்ளது.
இதனால் போலி சான்றிதழ் வழக்கை எஸ்டிஎப் மற்றும் அம்மாநில காவல் துறை, மத்திய அரசின் சிபிஐ, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் விசாரணையில் இறங்கி உள்ளன. இந்த மோசடிக்கு ஹரியானாவின் சோன்பத்திலும் ஒரு கும்பல் உதவி செய்துள்ளது. இந்த கும்பலின் தலைவரும் விஜயேந்திராவின் நண்பருமான சஞ்சய் ஷெராவாத் தலைமறைவாகி உள்ளார்.
சவுத்ரி விஜயேந்திரா சிங் மீதான வழக்குகளில், இருசக்கர வாடகை வாகனங்களுக்கான ‘பைக் பாட்’ (சுமார் 4,200 கோடி மோசடி) தொடர்புடையது ஆகும். இதில் முன் ஜாமீன் பெற்று தனது மோசடிகளை தொடர்ந்துள்ளார் விஜயேந்திரா. கரோனா பரவலின்போது 2022-ல் இந்த மோனாட் பல்கலைக்கழகத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இத்துடன், ஹரியானாவின் பல்வல்லின் எஸ்விஎஸ் கல்லூரி மற்றும் லக்னோவின் சரஸ்வதி மருத்துக் கல்லூரியிலும் விஜயேந்திராவுக்கு பங்குகள் உள்ளன. இவரது சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி எனத் தெரிந்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிஎஸ்பி கட்சியில் இணைந்து, ஹரியானாவில் போட்டியிட்டுள்ளார். பிறகு தன் மீதான வழக்குகளிலிருந்து தப்ப உ.பி.யில் ஆளும் பாஜகவில் இணையவும் முயற்சித்து வந்துள்ளார்.
இந்த கும்பலின் மூலம் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 2 லட்சம் போலி சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உ.பி., பிஹார், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த மோசடியில் நாடு முழுவதிலும் கூட பலர் கைதாக வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே, ஹாப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோனாட் பல்கலைக்கழகத்தின் யூஜிசி அங்கீகாரத்தை ரத்து செய்யும் பணிகளும் தொடங்கி உள்ளன.