ஏழு தலைமுறைகளாக முகலாய ஓவியம் வரையும் ஒரே குடும்பம் – வாராணாசியில் 5 வயதில் ஓவியரான வாரிசு

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் வாராணாசியில் ஏழு தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் முகலாய ஓவியம் வரைகின்றனர். இவர்களின் வாரிசான இளைஞர் அங்கித் பிரசாத் அணில், தன் 5 வயதிலேயே ஓவியங்களை வரையத் துவங்கி உள்ளார்.

உ.பியின் புனிதத் தலமான வாராணாசியின் லங்கா பகுதி. இங்கு கடந்த ஏழு தலைமுறைகளாக முகலாய ஓவிய பாணியை முன்னெடுத்து வரும் ஒரே குடும்பம் வசிக்கிறது. இதன் வாரிசான இளைஞர் அங்கித் பிரசாத் அணில், தனது ஐந்து வயது முதல் இந்த முகலாய ஓவியத்தை தம் மூதாதையர்களிடம் இருந்து கற்றுள்ளார்.

லங்கா பகுதியின் குறுகிய சந்துகளில் உள்ள தனது வீட்டில் அங்கித் பிரசாத் அணில், முடியால் செய்யப்பட்ட தூரிகையால் கிருஷ்ணரை வரைந்து கொண்டிருக்கிறார். இந்தக் கலை பிற்கால முகலாய ஓவியம் என்று அழைக்கப்படுகிறது.

அங்கித்தின் மாமா டாக்டர் கோபால் பிரசாத் கூறுகையில், ‘எங்கள் மூதாதையரான உஸ்தாத் சிக்கி குவால் இந்த ஓவியத்தை வரையத் தொடங்கினார். அவருக்குப் பிறகு, உஸ்தாத் படோஹி பிரசாத், உஸ்தாத் மூல்சந்த் பிரசாத், உஸ்தாத் ராம்பிரசாத், உஸ்தாத் சாரதா பிரசாத், முகுந்த் மற்றும் கோபால் பிரசாத், அங்கித் பிரசாத் ஆகியோர் இந்த ஓவியங்களை வரைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் முகலாயர் காலத்தில் உருவான இந்த தனித்துவமான ஓவியத்தின் மரபைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்கின்றனர். முகலாயர்கள் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, அந்தக் கலைஞர்களில் சிலர் வாராணாசிக்கு அனுப்பப்பட்டனர்.

டெல்லியில் இருந்து முகலாயர்கள் குழு காசியில் உள்ள ஷிவாலா காட் பகுதிக்கு வந்தது. ஓவியர் லால்ஜி முசாவரும் முகலாயர்களுடன் இருந்தார். எங்கள் மூதாதையர் உஸ்தாத் சிக்கி குவால் 1760-ல் அவரைச் சந்தித்தார்.

இதன் பிறகு, பிந்தைய ஓவியம் ஒரு சிறப்பு பரிமாணத்தைப் பெற்றது. காலப்போக்கில், இந்த ஓவியமும் மாறிக்கொண்டே இருந்தது. இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் படங்களும் அதில் பொறிக்கத் தொடங்கின.’ எனத் தெரிவித்தார்.

முகலாயர் காலத்தின் பல ஓவியர்கள் டெல்லியிலிருந்து வெளியேறி, மலைப்பாங்கான பகுதிகளுக்கு சென்றனர். உ.பியின் பைசாபாத், மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்களுக்கும் சென்றனர்.

பிற்கால ஓவியங்களில், முகலாய ஓவியமானது இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றபடி வரையப்படுகின்றன. இதன் நுட்பத்தில், இன்று மேலும் வண்ணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஏனெனில், ஆரம்ப காலங்களில் முகலாய மற்றும் அஜந்தா ஓவியங்களில் ஐந்து அல்லது ஆறு வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதில் முகலாய ஓவியக் கலையை வாராணாசியின் பிரசாத் குடும்பத்தினர் முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.

இது குறித்து அங்கித் பிரசாத் அணில் கூறுகையில், “முன்பு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓவியத்திற்கான ஒரு பாடம் இருந்தது. அதுபோல், இன்றும், ஒரு வாய்ப்பு கிடைத்தால் முகலாய ஓவியங்கள்போல் பல பாரம்பரியங்கள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறலாம்” என்கிறார்.

வாராணாசியின் சித்தேஸ்வரி பகுதியின் அருகிலுள்ள பீதாம்பரா தேவியின் சுவர்கள் மற்றும் கூரையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை 18-ஆம் நூற்றாண்டில் பிரசாத் குடும்பத்தின் மூதாதையர் உஸ்தாத் ராம் பிரசாத் அவர்களால் வரையப்பட்டதாக அவரது குடும்பம் கூறுகிறது. அக்காலங்களில் ராஜஸ்தானி மற்றும் முகலாய பாணிகளை இணைத்து மற்றொரு மூதாதையரான உஸ்தாத் மூல்சந்த் ஒரு கலப்பு பாணி ஓவியத்தை உருவாக்கி உள்ளார். தற்போது, அங்கித் பிரசாத் அணிலின் கலைப் பயணமும் பல புதிய பரிசோதனைகளால் வளப்படுகிறது.

முகலாய ஓவியங்கள் அன்றி, ஜம்மு மற்றும் பஹாடி பாணிகளிலும் அங்கித் பிரசாத் ஒரு தனித்துவமான ஓவியங்களைப் படைத்து வருகிறார். இவர் தம் மூதாதையர்களைப் பார்த்தும், கேட்டறிந்தும் தனது ஐந்து வயதிலேயே ஓவியம் வரையத் தொடங்கினார்

ஐந்து வயதிலேயே தன் மலர் கரங்களால் ஓவியத்திற்கானத் தூரிகையை அங்கித் எடுத்துள்ளார். தம் மனதில் தோன்றியதை, அவர் திரைச்சீலைகள் அல்லது சுவர்களில் வரையும் பழக்கம் கொண்டுள்ளார்.

காலப்போக்கில், அவர் முகலாய ஓவியத்தில் அதிக தீவிரத்தைக் காட்டத் தொடங்கினார். இன்று, இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள பல இளம் தலைமுறையினர் வாராணாசி மட்டும் அன்றி அக்கம், பக்கம் உள்ள நகரங்களிலிருந்து அங்கித்திடம் வருகின்றனர்.

தம் தாய்நாடான பெர்ஷியாவிலிருந்து முகலாயர்கள் ஓவியர்களையும் திரளான எண்ணிக்கையில் அழைத்து வந்தனர். இவர்களை இன்றைய காலத்து புகைப்பட கலைஞர்களை போல் அப்போது மன்னர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

தமது அரண்மனைகளின் அன்றாட நடவடிக்கைகள் அன்றி தாம் செல்லும் இடங்களுக்கு இந்த ஓவியர்களை மன்னர்கள் உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களது முக்கிய நடவடிக்கைகளை காட்சியாக வரைய வைத்து முகலாயப் பேரரசர் அக்பர் உள்ளிட்டோர் பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.