பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி – முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

மதுரை:
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல் மயமாக்கிய அதிமுகவிற்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கவே யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை. மதுரைக்கு மோனோ இரயில் என்று சொன்னார்கள். எங்கே அது ஓடுகிறது? 
முத்துராமலிங்கத் தேவர் சிலையருகே பறக்கும் பாலம் என்று கூட சொன்னார்கள். பறக்கும் பாலம் ஏதாவது இருக்கிறதா? 
மதுரை வைகை நதியை, லண்டனின் தேம்ஸ் நதி போல மாற்றுவோம் என்றும், மதுரையை சிட்னி நகரைப் போல மாற்றுவோம் என்றும்; மதுரையை ரோம் நகரைப் போல மாற்றிவிடுவோம் என்றும், விஞ்ஞானி செல்லூர் ராஜூ சொன்னார். ஆனால் எதையும் செய்யவில்லை. இதுதான் அதிமுகவின் லட்சணம்.
தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கிறது என்று புதிதாக ஜோசியம் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யார் என்று தெரிந்துதான், அமைதிப்படையாக வாக்களித்து, அவர்களை இன்றைக்கு புலம்ப விட்டிருக்கிறார்கள் நம் தமிழக மக்கள். 
அ.தி.மு.க. அஸ்தமனத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்ற கட்சி, அதிமுக. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பறிகொடுத்த கட்சி, அதிமுக. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்த கட்சிதான் அதிமுக.
அடுத்து நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், சுத்தமாகக் காணாமல் போன கட்சி அதிமுக. இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் படு தோல்வியைச் சந்திக்கப் போகின்ற கட்சிதான் அதிமுக. அவர்களுக்குத் தெரிந்த அரசியல் எல்லாம், அமாவாசை அரசியல்தான். 
பழனிசாமி ஆட்சியை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கூவத்தூரில் ஊர்ந்தார், ஊழலில் புரண்டார், ரெய்டுகளுக்கு குனிந்தார்.சுயமரியாதையைத் துறந்தார், நீட் தேர்வு முதல், மாநில உரிமைகள் அனைத்தையும் டெல்லிக்கு அடகு வைத்துப் பணிந்தார். இவ்வாறுதான் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
2024 முதல் நாட்டில் ஒரே நாடு – ஒரே தேர்தல் வரப் போகிறது என்று ஆருடம் சொல்கிறார் பழனிசாமி. கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி. பழனிசாமி யாரை மிரட்டுகிறார்? மிசாவையே பார்த்த இந்த ஸ்டாலினை உங்ளால் மிரட்ட முடியுமா? கற்பனையில்கூட அவ்வாறு கனவு காணாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.