பஞ்சாப்: தேர்தல் விதிமீறல் வழக்குகளை எதிர்கொள்ளும் முன்னணி தலைவர்கள்

புதுடெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அகாலி  தளம் தலைவர் சுக்பீர்  சிங் பாதல், காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான சரண்ஜித் சன்னி ஆகிய முக்கிய தலைவர்கள் மீது தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினர் மீது வீடியோ வெளியிட்டதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அகாலி தளம் துணை தலைவர் அர்ஷ்தீப் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் மீது தவறான மற்றும் அற்பமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. 
இதேபோல் ஆம் ஆத்மி கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில், சுக்பீர் சிங் பாதல் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் ஓட்டு கேட்டு பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக ஆம் ஆத்மி புகார் அளித்துள்ளது. 
நேற்று பிரசாரம் செய்வதற்கான அவகாசம் முடிந்த பின்னர், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மானசாவில் உள்ள கோவிலுக்கு சென்றபோது, அங்கு வீடு வீடாக பிரசாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக உள்ளது. இதேபோல் பாஜக, அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் (சம்யுக்தா) ஆகிய கட்சிகள் ஒரு அணியாக களத்தில் உள்ளன. இதுதவிர பல்வேறு விவசாய அமைப்புகளின் அரசியல் அமைப்பான சம்யுக்தா சமாஜ் மோர்ச்சாவும் போட்டியிடுகிறது. பலமுனை போட்டி உள்ள இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படுகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.