குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடும் வழக்கறிஞரை நியமிக்க கெடு விதித்தது பாகிஸ்தான் கோர்ட்

இஸ்லாமாபாத்:
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி அவரை 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017, ஏப்ரலில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.  அதன்படி தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்தது. 
குல்பூஷன் ஜாதவுக்கான தண்டனையை மறுஆய்வு செய்வது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடும் வழக்கறிஞரை நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் இந்தியாவிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டது. ஆனால், இந்திய வழக்கறிஞரை நியமிக்க வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று கூறிய இந்தியா, வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் இருந்தது. 
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது. இறுதியாக பாகிஸ்தான் அட்டர்ஜி ஜெனரல் இன்று தனது வாதத்தை முன்வைத்தார். பாகிஸ்தான் தீர்ப்பை மீறுகிறது என்ற புகாருடன் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவதற்காக இந்தியா வழக்கை தாமதப்படுத்துகிறது என்று அவர் குற்றம்சாட்டினார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், குல்பூஷன் ஜாதவுக்காக வாதாடும் வழக்கறிஞரை ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் நியமிக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.