2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய சித்திரை திருவிழா: மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மதுரை மாசி வீதிகள்

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலக பிரசித்திபெற்றது. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். விழா தொடங்கியதில் இருந்தே மதுரை விழாக்கோலம் பூண்டுவிடும். திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் மாசி வீதிகளில் சுவாமி வீதிஉலா நடைபெறும். இதில் பக்தர்கள், சுவாமி வேடமணிந்த சிறுவர்-சிறுமிகள் என ஏராளமானோர் அணி வகுத்து செல்வார்கள்.

மேலும் பல்வேறு வேடமணிந்த சிறுமிகள் கோலாட்டம் ஆடிய படியும், பாட்டு பாடியபடியும் செல்வார்கள். இதனைக் காண மதுரை மாநகர பகுதிகள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமி வீதிஉலா நடைபெறும் மாசி வீதிகளில் திரண்டு விடுவார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா வழக்கம்போல் நடத்தப்படவில்லை. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

மதுரை மக்களை பொருத்தவரை சித்திரை திருவிழாவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பு கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மதுரை சித்திரை திருவிழாவை வழக்கம்போல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்து வருகிறது.

கடந்த 5-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

சுவாமி வீதி உலா 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வழக்கம்போல் கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் நடைபெறும் சுவாமி வீதிஉலாவில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் மதுரை மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி வேடத்தில் வந்து பார்ப்போரை வியக்க வைக்கிறார்கள்.

குழந்தைகள் என்றாலே அழகு. அதுவும் தெய்வங்களின் வேடத்தில் பார்ப்பது தனி அழகுதான். வீதிஉலா வரும் சுவாமிகளை பார்ப்பதற்கும், வேடமணிந்து வரும் சிறுவர்-சிறுமிகளை பார்ப்பதற்கும் தினமும் மாசி வீதிகளில் ஏராளமானோர் திரளுகிறார்கள். இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழா களை கட்டியிருக்கிறது.

சித்திரை திருவிழாவின் முதல் நாளிலேயே வீதி உலா நடைபெற்ற மாசி வீதியில் சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்றார்கள். அடுத்தடுத்த நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.சாலையே தெரியாத அளவுக்கு மாசி வீதி முழுவதுமாக மக்கள் திரண்டு நின்றார்கள்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் காட்சி கொடுக்கவும் இறைவன் மாசிவீதியில் வலம் வருகிறார் என்பது ஐதீகம். அதன்படியே சித்திரை திருவிழாவின்போது மாசி வீதியில் நடக்கும் சாமி வீதி உலாவை பார்க்க மக்கள் திரள்கிறார்கள்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 14-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரள்வதுண்டு. இதற்காக டிக்கெட் வினியோகம் நடந்துவருகிறது.

15-ந்தேதி மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதேபோல் அன்றைய தினம் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் (16-ந்தேதி) வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இதையும் படிக்கலாம்…
வீடு கட்ட மனையடி சாஸ்திரம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.