1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்
கொரோனா
வின் 2-வது அலை பரவத்தொடங்கியது.

இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கம் குறைந்த பின்னர் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. டிசம்பர் மாதம் 6-ந் தேதி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் நாடு முழுவதும்
கொரோனா
வின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று கடந்த ஜனவரி மாதம் பரவத்தொடங்கியது. இதனை தொடர்ந்து புதுவையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் ஜனவரி மாதம் 18-ந் தேதியில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி 1 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு கடந்த வாரம் இறுதியில் தொடங்கியது. இந்த தேர்வுகள் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை கண்காணிப்பு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வருகை நாட்கள் குறைவு, கட்டணத்தை முழுமையாக செலுத்தவில்லை உள்ளிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்களின் தேர்ச்சியை தடுத்து நிறுத்த கூடாது. எல்.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளையுடன் நிறைவு பெறும். அந்த வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் தொடங்கும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 30-ந் தேதி வரையும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 28-ந் தேதி வரையும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.