கர்நாடகா மால்பே கடற்கரையில் சுற்றுலா பயணிகளை கவர அதிநவீன மிதவை பாலம்

பெங்களூரு:

கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் குளுமையான சுற்றுலா தலங்களை நாடி மக்கள் செல்கின்றனர். இங்குள்ள முக்கிய சுற்றுலாத்தலமான மால்பே கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். மால்பே கடற்கரைக்கு தினமும் 4 முதல் 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில், வார இறுதி நாட்களில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

படகு சவாரி, வாட்டர் ஸ்கூட்டர்கள், மிதக்கும் பாலங்கள் மற்றும் பாராசூட்டுகள் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் உல்லாசமாக பொழுதை கழிக்கின்றனர். மால்பேயில் சுற்றுலா சீசன் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது.

மழைக்காலத்தின் தொடக்கத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், ஜூன் 1ந்தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. மால்பே கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மாநிலத்தின் முதல் மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளுக்கு மத்தியில் மிதக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்த பாலத்தில் 15 நிமிடங்களுக்கு ரூ.100 கட்டணத்தில் சிறப்பு அனுபவத்தை உணரலாம்.

இந்த பாலத்தின் இருபுறமும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக 10 லைப் கார்டுகளும், 30 லைப்பாய்களும் இருப்பார்கள். மிதக்கும் பாலத்தை அனுபவிக்க விரும்பும் அனைவரும் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும்.

இந்த மிதக்கும் பாலம் 100 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் அகலமும் கொண்டது. இது அதிக அடர்த்தி கொண்ட போண்டோன்ஸ் எனப்படும் மூலப் பொருள் மூலம் செய்யப்படுகிறது. பாலத்தின் முடிவில் 12.5 மீட்டர் நீளமும், 7.5 மீட்டர் அகலமும் கொண்ட தளம் 15 நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்த பாலத்தை உடுப்பி எம்.எல்.ஏ. கே.ரகுபதி பட் திறந்து வைத்தார். பாலத்தில் ஒரே நேரத்தில் 100 சுற்றுலாப் பயணிகள் வரை நடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க 10 உயிர்காக்கும் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மிதக்கும் பாலம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பாதுகாப்புக்காக எப்போதும் பாலத்தின் அருகிலேயே படகு நிறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.