மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை கலெக்டர்களுக்கு பசுமை விருது- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.

மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை கலெக்டர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் கலெக்டர் த. மோகன் மற்றும் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில், ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்-சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம்-கிளீன் குன்னூர் மற்றும் போரூர்-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 2021-ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.