செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: புதிய வரைபடத்தை வெளியிட்ட இஎஸ்ஏ

சிகப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் தண்ணீர் இருந்ததை சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA). மனிதர்களின் எதிர்கால வசிப்பிடமாக இந்த கோள் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், இந்த வரைபடம் வெளியாகி உள்ளது.

உலக நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் தங்களை மற்ற நாடுகளுக்கு முன்பு செல்வாக்கு மிக்க வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளுக்காக கோடான கோடி ரூபாயை செலவிட்டு வருகின்றன. இந்த கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியம் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் நடந்து வருகின்றன.

அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மேற்கொண்ட செவ்வாய் கிரக ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில், அந்த கிரகத்தின் முதல் தண்ணீர் மேப்பை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் அப்சர்வேட்டரி மற்றும் அமெரிக்காவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரும் இணைந்து அங்குள்ள கனிம வளங்களை அடையாளம் கண்டுள்ளன. இந்த வளங்கள் அந்த கிரகம் முழுவதும் நிரம்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளங்கள் அங்குள்ள பாறைகளில் இருந்து உருவாகி இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீர் மூலம் ரசாயன மாற்றம் அடைந்து, பின்னர் அது உப்பாகவும், களிமண்ணாகவும் காலப்போக்கில் மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த கிரகம் முழுவதும் தண்ணீர் இருந்துள்ளதை அறிந்து கொள்ள முடிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான முயற்சிகள் நடந்து வரும் சூழலில் இந்த வளங்களை கண்டறிந்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ரோபோக்கள் தரையிறக்கி ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. பின்னர் அது மனிதர்கள் அடங்கிய மிஷனாக மாற்றம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கூட இந்த கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் பணியில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

— ESA Science (@esascience) August 22, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.