அடுத்த ஆண்டு முதல், இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளனர் என்று, விமானப்படைத் தளபதி தெரிவித்தார்.
சண்டிகரில் இன்று (அக்.8-ம் தேதி) இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி பங்கேற்று உரையாற்றுகையில், “இந்திய விமானப்படை அதிகாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுத பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இப்போது தான் இந்த பிரிவு தொடங்கப்படுகிறது. மத்திய அரசு இப்போது தான் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த பிரிவு அனைத்து வகையான நவீன ஆயுதங்களை கையாளும். இதன் மூலம் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மிச்சமாகும்.
அக்னிபாத் திட்டத்திற்காகவே விமானப்படையில் பயிற்சி முறைகளை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு உரிய பயிற்சியும், திறனும், அறிவும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ், பயிற்சிக்காக 3 ஆயிரம் வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
வருங்காலங்களில் விமானப்படையில் அக்னிவீரர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு முதல் மகளிரும் விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளனர்” என்று கூறினார்.