கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள முலாந்துருத்தி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் 10, 11 , 12-ம் வகுப்பு மாணவர்கள் தனியார் சொகுசு பேருந்தில் உதகைக்கு கிளம்பினர். 42 மாணவ, மாணவிகளும் 5 ஆசிரியர்கள், இரு ஓட்டுனர்கள் என மொத்தம் 49 பேர் பேருந்தில் பயணித்தனர்.
மாணவர்களுடன் வந்த தனியார் பேருந்து பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே கொள்ளமத்ரா பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, அங்கு பயணிகளுடன் நின்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்தின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், கேரள அரசு பேருந்தின் பின்புற பகுதியும், மாணவர்களுடன் வந்த சொகுசு பேருந்தின் முன்பகுதியும் கடுமையாக சேதமானதுடன், சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில், தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள், ஒரு ஆசிரியர் ஆகிய 6 பேரும், கேரள மாநில அரசு பேருந்தில் பயணித்த மூன்று பேர் என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 25 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், பள்ளிகளில் இருந்து சுற்றுலா செல்ல கேரள மாநில பள்ளிக்கல்வித்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்யக் கூடாது. பயணத்தின் விவரங்கள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். போக்குவரத்துறையின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.